புதிய ஜனாதிபதி தெரிவு உலக அரசியல் வரலாற்றில் முக்கியமானதாக காணப்படும் – சபாநாயகர்

238 0

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வழிமுறைகள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி தெரிவு நிறைவு பெறும் வரை ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள்,கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் ஆகியவற்றை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் செயற்படுத்துவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, தென்னாசியாவில் பழமையான ஜனநாயக நாடு என பெருமை கொள்ளும் நாம் புதிய ஜனாதிபதி தெரிவை முழுமையான ஜனநாயக வரைபிற்குட்பட்டதாகவும்,வினைத்திறனான முறையிலும் செயற்படுத்துவது எமது நாட்டிற்கு மாத்திரமல்ல உலக அரசியல் வரலாற்றிலும் முக்கியமானதாக காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றையதினம் நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

சபாநாயகர் இதன் போது மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை கோட்டாபய ராஜக்ஷ இராஜினாமா செய்தார்.

நேற்று (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் சட்டபூர்வமாக அவர் பதவி விலகியுள்ளார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் பதவி விலகிய முதலாவது ஜனாதிபதியாக கோட்டபய ராஜபக்ஷ கருதப்படுகிறார்.

புதிய ஜனாதிபதி தெரிவு இடம்பெறும் வரை ஜனாதிபதிக்கான அதிகாரங்கள், கடமைகள் ஆகியவற்றை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் செயற்படுத்துவார்.

புதிய ஜனாதிபதி தெரிவு ஏழு நாட்களுக்குள் நிறைவடைய வேண்டும். அரசியலமைப்பு,ஜனநாயக கோட்பாடுகளுக்கமைய செயற்படுவதற்கு நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அரசியலமைப்பின் 38(1) உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவது தொடர்பிலான கடிதம் நேற்று (14)மாலை கிடைக்கப்பெற்றது.

அதற்கமைய 2022 ஜூலை மாதம் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி சட்டபூர்வமாக பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அதற்கமைய புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வழிமுறைகள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி தெரிவு நிறைவு பெறும் வரை ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள்,கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் ஆகியவற்றை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் செயற்படுத்துவார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வது தொடர்பில் கட்சி தலைவர் கூட்டத்தில் சகல கட்சி தலைவர்களுக்கும் குறிப்பிட்டதற்கமை,1981,02ஆம் இலக்கத்திலான ஜனாதிபதி தெரிவு விசேட விடயதான சட்டம் மற்றும் அரசியலமைப்பின் 40 ஆவது உறுப்புரையின் பிரகாரம் இடம்பெறும்.புதிய ஜனாதிபதி தெரிவு விரைவாக நிறைவு செய்யப்பட வேண்டும்.

தென்னாசியாவில் பழமையான ஜனநாயக நாடு என பெருமை கொள்ளும் நாம் புதிய ஜனாதிபதி தெரிவை முழுமையான ஜனநாயக வரைபிற்குட்பட்டதாகவும்,வினைத்திறனான முறையிலும் செயற்படுத்துவது எமது நாட்டிற்கு மாத்திரமல்ல உலக அரசியல் வரலாற்றிலும முக்கியமானதாக காணப்படும்.

ஆகவே ஜனநாயக செயற்பாட்டிற்கு முழுமையான ஒத்துழைப்பு வழஙகுமாறு சகல கட்சி தலைவர்களிடமும், அரச அதிகாரிகளிடமும், பாதுகாப்பு தரப்பினரிடமும் வலியுறுத்துகிறேன்.

குறிப்பாக நாட்டின் கௌரவமான மற்றும் அன்பான மக்களிடம் கேட்டுக்கொள்வது யாதெனில் ஜனநாயக பாராளுமன்ற முறைமையை செயற்படுத்துவதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல உறுப்பினர்களும் சுதந்திரமாக மற்றும் மனசாட்சிக்கு அமைவாக பாராளுமன்ற அமர்வில் கலந்தக்கொள்ளும் அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அமைதியான சூழலில் பொறுப்பான தரப்பினரது பங்குப்பற்றலுடன், 7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தெரிவை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளேன். அதற்கமைய இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் என்றார்.