முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் இன்று (15) வரை வௌிநாடுகளுக்கு பயணிக்கப் போவதில்லை என உயர் நீதிமன்றத்திற்கு உறுதியளிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோர் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவும் எஸ். ஆர். ஆட்டிகல சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயசிங்கவும் இதனை உயர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் சார்பில் எந்த சட்டத்தரணியும் ஆஜராகாத நிலையில், அவருக்கு மட்டும், இன்று வரை நாட்டை விட்டு வெளியேற உயர் நீதிமன்றம் பயணத் தடை விதித்தது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், தனக்கு தற்போதைக்கு வெளிநாடு செல்ல வேண்டிய தேவை இல்லை எனவும், அவ்வாறு அவசியம் ஏற்பட்டால் உயர் நீதிமன்றுக்கு அறிவித்து அனுமதி பெற்றுக்கொள்வதாக தனது சட்டத்தரணி ஊடாக அறிவித்தார்.
நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், சட்டத்தரணி உபேந்ர குணசேகரவின் நகர்த்தல் பத்திரத்துக்கு அமைய நேற்று ( 14) ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன் விசாரணைக்கு வந்தது.
பிரதம நீதியர்சர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியர்சர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி. தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே இந்த உறுதிப் பாடு கள் நீதிமன்றுக்கு வழங்கப்பட்டன.
மூன்று பல்கலைக்கழக புத்திஜீவிகள், இலங்கையைச்சேர்ந்த நீச்சல் வீரரும் பயிற்றுவிப்பாளருமான ஜுலியன் பொல்லிங், இலங்கை வர்த்தகப்பேரவையின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு மற்றும் ஜெஹான் கனக ரத்ன ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் சீரற்ற நிதி நிர்வாகம் ஆகியவற்றுக்கான முக்கிய பொறுப்பாளிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அம்மனுக்களில் கோரப்பட்டிருந்தது.
மேற்குறிப்பிட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த கலாநிதி அத்துலசிறி குமார சமரகோன், புத்திஜீவிகளான சூசையப்பு நேவிஸ் மொறாயஸ் மற்றும் கலாநிதி மஹிம் மென்டிஸ் ஆகியோர் தமது மனுக்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் டபிள்யூ.டி.லக்ஷ்மன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல உள்ளிட்ட 39 பேரை பிரதிவாதிகளாகப் பெயரிட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வரிக்குறைப்புக்களே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்குப் பிரதான காரணமென மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக மக்களால் செலுத்தப்படும் வரிகளைக் குறைப்பதற்குத் தன்னிச்சையான தீர்மானத்தை மேற்கொண்டார் என்றும், இத்தீர்மானம் முற்றுமுழுதாக அரசியல் ரீதியான நகர்வென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் கணக்காய்வாளர் நாயகம் இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையின் கொடுக்கல், வாங்கல்களைக் கணக்காய்விற்கு உட்படுத்தி மத்திய வங்கிக்கு ஏற்பட்டிருக்கும் நட்டத்தை மதிப்பீடு செய்யும்படி உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
நேற்று மனுவானது இடைக்கால நிவாரணமாக கோரப்ப்ட்ட, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ; ஆட்டிகல ஆகியோர் உயர் நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறாமல் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுத்து உத்தர்விட வேண்டும் என்பதை பரிசீலிக்க விசாரணைக்கு வந்தது.
இதன்போது மனுதாரர் தரப்பின் ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர, வெளிநாட்டு பயணத் தடை கோரிக்கையை முன்னிறுத்தீ சுமார் ஒன்றரை மணி நேர வாதங்களை முன் வைத்தார்.
இதனையடுத்தே ; இன்றுவரை மஹிந்த, பசில், எஸ். ஆர். ஆட்டிகல வெளிநாடு செல்ல மாட்டார்கள் என அவர்களது சட்டத்தரனிகள் உறுதியளித்தனர்.
இந் நிலையில் இம்மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகள் இன்று வரை ஒத்தி வைக்கப்ப்ட்டன.
இவ்வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மற்றும்ஜனாதிபதி சட்டத்தரணி ; சந்தக ஜயசுந்தர ஆகியோரும் சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் நரின் புள்ளேவும் ஆஜராகின்றமை குறிப்பிடத்தக்கது.