அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் மனைவி இவானா (73). இவர் நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்தார். டிரம்பின் முதல் மனைவியான இவானா 1992 ஆம் ஆண்டு டிரம்பிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார். மேலும், இவர் டொனால்ட் ஜூனியர், எரிக் டிரம்ப் மற்றும் இவாங்கா டிரம்பின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நியூயார்க் காவல்துறையின் அவசர உதவி எண்ணிற்கு வந்த அழைப்பின் பேரில் போலீசார் அங்கு சென்றுபார்த்தனர். அப்போது, அங்கு இவானா சுயநினைவின்றி கிடந்ததாகவும், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக நியூயார்க் நகர போலீசார் தெரிவித்துள்ளனார்.
இவானா மரணத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.