நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை, அத்தியாவசிய சேவைகள் குறித்து முன்னுரிமை அளித்து விநியோகம் செய்வது தொடர்பிலான முறையான வேலை திட்டமொன்றினை வகுத்து அது குறித்து உயர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் நேற்று (14) உத்தரவிட்டது.
நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையிலான மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதியரசர்களை உள்ளடக்கிய குழாம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது.
மின்சாரம், சமையல் எரிவாயு, எரிபொருள், பால் மா, மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு உத்தரவிடுமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்துள்ள இரு அடிப்படை உரிமை மனுக்கள் நேற்று (14) விசாரணைக்கு வந்த போதே உயர் நீதிமன்றம் இதனை அறிவித்தது.
மனுதாரர்களான இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி ஜி.ஜி. அருள் பிரகாசத்தின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே. கனக ஈஸ்வரன், உதித்த இகலஹேவா சட்டத்தரணிகளான சுரேன் ஞானராஜா, புலஸ்தி ஹேவமான்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாத்தினர் இம்மனு தொடர்பில் ஆஜராகின்றனர்.
எஸ்.சி.எப்.ஆர். 106/ 22 மற்றும் எஸ்.சி.எப்.ஆர். 107 /22 ஆகிய இலக்கங்களின் கீழ் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் இந்த இரு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், அதன் உப தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, செயலாளர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய, பொருளாளர் சட்டத்தரணி ரஜித்த பெரேரா, பிரதி செயலர் சட்டத்தரணி பசிந்து சில்வா ஆகியோரால் இந்த இரு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களிலும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள், திறை சேரியின் செயலர், மத்திய வங்கி ஆளுநர், மத்திய வங்கியின் நிதிச் சபை, இலங்கை மின்சார சபை, கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், சட்ட மா அதிபர் உள்ளிட்ட 42 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த தவணையின் போது உயர் நீதிமன்றம் எரிபொருள் கொள்வனவு, விநியோகம், விநியோக நடவடிக்கையின் போது முன்னுரிமை அளிக்கப்படும் துறைகள் எவை என்பதை தெளிவுபடுத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தர்விட்டிருந்த நிலையில், அதன்படி வலு சக்தி மற்றும் மின்சக்தி அமைச்சின் செயலாளரின் சத்தியக் கடதாசியுடன் கூடிய அறிக்கை ஒன்றினை நேற்று மனுக்கள் விசாரணைக்கு வந்த போது, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கையில், இலங்கைக்கு இறக்குமதி செய்யபப்டவுள்ள எரிபொருள், அதன் விநியோகம் உள்ளிட்ட விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது.
எனினும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வேலைத் திட்டம் தொடர்பில் திருப்தியடைய முடியாது என, மனுதாரர்களுக்காக மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா மன்றில் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையிலேயே, நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை, அத்தியாவசிய சேவைகள் சேவைகள் குறித்து முன்னுரிமை அளிக்கப்பட்டு விநியோகம் செய்ய முறையான திட்டமொன்றினை உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு, சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
முன்னதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல்ச் செய்துள்ள இரு மனுக்களிலும், கணிய எண்ணெய், மின்சாரம், சமையல் எரிவாயு, உணவு, மருந்து, பால் மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுட்டிக்காட்டும் மனுதாரர்கள், அதனால் மக்கள் மிகப் பெரும் பாதிப்புக்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதனால் மக்களின் அடிப்படை உரிமைகல் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்களான இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதனால் மக்களுக்கு அத்தியவசியமான பொருட்களாக கருதப்படும் உணவு, சமையல் எரிவாயு, பால் மா, மின்சாரம், மருந்துகள் போன்றவற்றை தட்டுப்பாடின்றி நிவாரண விலையின் கீழ் தொடர்ச்சியாக மக்களுக்கு விநியோகிக்க முடியுமான செயற்றிட்டம் ஒன்றினை தயாரிக்குமாரு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு இந்த மனு ஊடாக கோரப்பட்டுள்ளது.
அதே போல், பொருளாதார நிபுணர்கள், அரச நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தற்போதைய பொருளாதார நெருக்கடியை சீர் செய்வதற்கான குறுகிய கால, மத்திய கால நீண்ட கால கொள்கை ரீதியிலான செயற்றிட்டம் ஒன்றினை வகுக்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறும் மனுக்களில் கோரப்பட்டுள்ளன.
அத்துடன் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்க தேவையான தேசிய கொள்கை ஒன்றினை தயாரிக்கவும் உத்தரவிடுமாறு மனுவூடாக கோரப்பட்டுள்ளது.
அதனைவிட, தேசிய விவசாயம், பால் உற்பத்தி, பண்னை உற்பத்திகளை அதிகரிக்க கொள்கை ரீதியிலான செயற்றிட்டம் ஒன்றினை வகுக்கவும் அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு மனுக்களில் கோரப்பட்டுள்ளன.