மக்கள் போராட்டத்தை கலவரமாக்க ஒரு தரப்பு முயற்சி – வாசுதேவ நாணயக்கார

154 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமையினால் நாட்டு மக்கள் ஆத்திரமடைந்துள்ளார்கள். ஜனநாயக கோட்பாடு தொடர்பில் கருத்துரைக்கும் பதில் ஜனாதிபதி நாட்டு மக்களின் அபிலாஷைக்கு மதிப்பளித்து பதவி விலக வேண்டும்.

மக்கள் போராட்டத்தை கலவரமாக மாற்றியமைக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள், போராட்டத்தில் கலந்துக்கொள்ளும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் பாராளுமன்ற இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நடப்பு நிலைவரம் தொட்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை அரசியல் வரலாற்றில் எத்தலைவர்களும் எதிர்கொள்ளாத நெருக்கடியான சூழ்நிலையை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எதிர்கொண்டுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தவறான பொருளாதார கொள்கை குறித்து உரிய நடவடிக்கையினை ஆரம்பத்தில் முன்னெடுத்திருந்தால் ஜனாதிபதி கோட்டாடபய ராஜபக்ஷவிற்கு இந்நிலைமை தோற்றம் பெற்றிருக்காது.

சகோதர பாசத்திற்காக கட்டுப்பட்டு பஷில் ராஜபக்ஷவிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையினையும்,முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எடுக்காத காரணத்தினால் ராஜபக்ஷர்களினது அரசியல் எதிர்காலம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளதுடன்,நாட்டு மக்களின் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்களின் கடுமையாக போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை மக்கள் போராட்டத்தின் பிரதான வெற்றியாகும்.

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமையினை தொடர்ந்து மக்கள் ஆத்திரமடைந்து போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

மக்கள் போராட்டத்தை ஒரு தரப்பினர் வன்முறையாக மாற்றியமைக்க முயற்சிக்கிறார்கள்.பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற போராட்டத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியினர் பொறுப்புக் கூற வேண்டும்.

நாடு அமைதியற்ற நிலையில் உள்ள போது பொறுப்பாக கட்சி என்ற ரீதியில் மக்களை தூண்டி விடாமல் அரசியலமைப்பின் ஊடாக நெருக்கடிக்கு தீர்வு காண அவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஜனநாயக கோட்பாடு தொடர்பில் கருத்துரைக்கும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து பதவி விலகி பாராளுமன்றத்தின் ஊடாக தீர்மானங்களை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.