அ.தி.மு.க. அலுவலகத்தை கடப்பாறையால் உடைத்து அராஜகம் செய்தவர் ஓ.பி.எஸ்.- கோகுல இந்திரா

121 0

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியை கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுக்குழுவுக்கான தீர்ப்புக்காக அனைவரும் காத்து கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில் தீர்ப்பு வெளி வருவதற்கு முன்பே நீதிபதி என்ன சொல்ல போகிறார் என்று தெரிவதற்கு முன்பே வீட்டில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமை கழகத்துக்கு புறப்பட்டார். அவருடைய பாதுகாப்புக்கு வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தொடர்ந்து சென்றுள்ளனர்.

அவரது ஆதரவாளர்கள் உருட்டு கட்டை, கடப்பாறை போன்ற ஆயுதங்களை கொண்டு வந்துள்ளனர். நாமெல்லாம் கோவிலாக நினைக்கக்கூடிய கட்சி அலுவலகத்தை கடப்பாறை கொண்டு உடைத்து அராஜகம் செய்தவர். கட்சியை அழிக்க எல்லா வழிகளிலும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி அலுவலகத்தை மூடியது சில்லறைத்தனமானது. ஓ.பி.எஸ். இந்த முறை தர்மயுத்தம் போட முடியவில்லை. ஒரு தலைவராக இருந்தவர் இதுபோன்ற அராஜக செயலில் ஈடுபட்டது, அவர் மீது இருந்த சிறிய அளவிலான மரியாதை கூட இல்லாமல் போனது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்து இருந்தால் தி.மு.க.விற்கு நல்லாட்சி சான்றிதழ் ரவீந்திரன் எம்.பி. கொடுத்து இருப்பாரா? இவ்வாறு அவர் கூறினார்.