5 வகையான மோதல்கள் மூலம் எடப்பாடி-ஓ.பி.எஸ். பலப்பரீட்சை: யாருக்கு சாதகமாக தீர்ப்புகள் கிடைக்கும்?

207 0

அ.தி.மு.க. வரலாற்றில் இதற்கு முன்பு பல தடவை சிக்கல்களை சந்தித்து உள்ளது. எம்.ஜி.ஆர். காலத்திலேயே அவரை எதிர்த்து சில அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கிவிட்டு பிறகு காணாமல் போய்விட்டனர். அதேபோன்றுதான் ஜெயலலிதா அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்று வழிநடத்திய போது அவரை எதிர்த்தும் பலர் புரட்சி செய்து பார்த்தனர். ஆனால் ஜெயலலிதாவின் அசைக்க முடியாத செல்வாக்கால் அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை.

இதனால் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. மிக மிக வலிமையாக இருந்தது. தற்போது அத்தகைய சூழ்நிலை இல்லாத நிலையில் 2 பெரும் தலைவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில் வெற்றி பெற்று அ.தி.மு.க.வை கைப்பற்ற போவது யார் என்பதில்தான் மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அவருக்கு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள்,

துணைக்கழக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என அனைத்து பிரிவுகளிலும் 97 சதவீதத்துக்கு மேல் ஆதரவு உள்ளது. எனவே அ.தி.மு.க.வை நிர்வகிக்கும் பொறுப்பு அவருக்குத்தான் கிடைக்கும் என்பது பொதுவான மக்களின் மனநிலையாக உள்ளது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் கமிஷன் மூலமாகவும், கோர்ட்டு நடவடிக்கைகள் மூலமாகவும் தனக்கு சாதகமான தீர்ப்புகளை பெற முடியும் என்று நம்புகிறார். முடியாத பட்சத்தில் அ.தி.மு.க.வையும், அதன் சின்னமான இரட்டை இலையையும் முடக்கி விடலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் இதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினரும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும், ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கும் 5 வகைகளில் மோதல் ஏற்பட்டுள்ளது. அதாவது, 1. தேர்தல் ஆணையம் 2. கோர்ட்டு 3. சட்டசபை 4. போலீஸ் 5. வங்கிகள் என 5 வகையான பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. தங்களுக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மனு கொடுத்து உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து இன்று முழுமையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. 11-ந் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் எடப்பாடி தலைமையிலான அணிக்கே அ.தி.மு.க.வுக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் பழைய ஆவணங்களை காட்டி கொண்டிருக்கிறார்கள்.

இதில் தேர்தல் ஆணையம் சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி பழைய முன் உதாரணங்களை அலசி பார்த்து விட்டு முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்திற்கு வருவதற்கு தாமதமாகும் என்பதால் கோர்ட்டையும் இரு தரப்பினரும் நாடி உள்ளனர். குறிப்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அணி வழக்கு தொடர்ந்து உள்ளது. இதற்கிடையே 11-ந் தேதி பொதுக்குழுவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர ஓ.பன்னீர் செல்வத்தின் அணி ஆலோசித்து வருகிறது.

ஆனால் ஏற்கனவே ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளில் தனக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதால் கோர்ட்டு மூலம் எப்படி பலப்பரீட்சை நடத்துவது என்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையிலான பலப்பரீட்சையில், சட்டசபையில் நடக்கும் பலப்பரீட்சைதான் முக்கியத்துவம் வாய்ந்தது. ஓ.பன்னீர் செல்வத்தின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியை பறிக்க எடப்பாடி பழனிசாமி கடிதம் கொடுத்து உள்ளார். ஆனால் அதை ஏற்க கூடாது என்று ஓ.பன்னீர் செல்வமும் கடிதம் கொடுத்து உள்ளார். தேர்தல் ஆணையம் வழங்கும் தீர்ப்பை பொறுத்துதான் சபாநாயகர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அதுவரை அ.தி.மு.க.-1, அ.தி.மு.க.-2 என்று இரண்டு பிரிவுகளாக செயல்பட சபாநாயகர் உத்தரவிடக்கூடும். இதனால் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் சட்டசபையில் மட்டும் அ.தி.மு.க. என்ற பெயரில் செயல்பட வாய்ப்பு உள்ளது. தமிழக காவல் துறையையும் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமி அணியினரும் அணுகி உள்ளனர்.

தலைமை கழகத்துக்கு வைக்கப்பட்ட ‘சீலை’ அகற்றும் விசயத்தில் 27-ந் தேதி நடக்கும் விசாரணை தொடர்பாக என்ன செய்வது என்று இரு தரப்பினரும் ஆலோசித்து வருகிறார்கள். போலீஸ் அறிக்கை பெற்று அதன்மூலம் தலைமை கழகத்தை மீட்க எடப்பாடி அணியினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். இதையும் தடுக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அ.தி.மு.க.வை வழி நடத்தும் விசயத்தில் வங்கி கணக்குகளில் உள்ள பணமும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே அந்த பணத்தை கையாள அனுமதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரது தரப்பிலும் வங்கிகளுக்கு கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் வங்கிகள் எந்த முடிவுக்கும் வரவில்லை. தேர்தல் ஆணையம், கோர்ட்டு முடிவுகளுக்கு ஏற்ப செயல்பட வங்கி அதிகாரிகள் தீர்மானித்து இருப்பதாக தெரிகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு இடையே இன்னும் சில தினங்களுக்கு இந்த ஐந்து வகையான பலப்பரீட்சை நீடிக்கும் என்று தெரிகிறது.