தமிழர் பகுதியில் குத்துச் சண்டை போட்டியில் சாதனை படைத்த பெண் வீராங்கனை

124 0

நவீன உலகின் பெண்கள் பலர் பல சாதகைளை படைத்து வருகின்றனர். கல்வித்துறை, தொழில் துறைகளில், ஆய்வாளர்கள், விண்வெளி வீரர்கள், வினையாட்டுத்துறை மற்றும் ஊடகத்துறை என அனைத்து துறைகளிலும் பெண்கள் இல்லாத துறைகளே இல்லை எனலாம்.

பெண்களை பெற்ற குடும்பத்தினரும், இந்த சூழலும் அவர்களை பெரிதாக விளையாட்டு துறைகளில் அனுமதிப்பதில்லை. ஆனால் இன்று அவை அனைத்தும் மருவி விளையாட்டு துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர்.

இலங்கையில் வட மாகாணத்தில் அமைந்துள்ள வவுனியா மாவட்டத்தில் கந்தசாமி டிலக்சினி என்ற பெண் ஒருவர் விளையாட்டு துறையில் சாதனை படைத்துள்ளார்.

டிலக்சினி க.பொ.த சாதாரண தரம் வரையில் இறைம்பைக்குளம் மகளிர் கல்லூரியிலும் உயர்தர கல்வினை வவுனியா இந்து கல்லூரியிலும் கற்றுள்ளார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் – விளையாட்டு விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ கற்கை நெறியினை கற்று வரும் இந்த மாணவி, ஏழ்மைக் குடும்பத்தை சேர்ந்த இவர் சிறு வயது தொடக்கம் விளையாட்டு துறையில் ஆர்வம் கொண்டிருந்தார்.

சிறு வயதில் தந்தையை இழந்து தாய் மற்றும் சகோதரிகளின் அரவணைப்பிலேயே வளர்ந்துள்ளார். இவரது குடும்பத்தில் 5 பெண் பிள்ளைகள். இவர் கடைசி மகளாகவும் துடிப்பும் ஆர்வமும் கொண்ட வீரப் பெண்ணாகவும் வளர்ந்துள்ளார்.

குத்து சண்டை துறையில் சாதிக்க வேண்டும் என்பதை இலக்கா கொண்டு தனது பயணத்தை ஆரம்பித்தார். கல்வி மற்றும் விளையாட்டுக்களில் அதீத திறமையை வெளிப்படுத்தினார்.

உள்நாட்டில் இடம்பெற்ற பல போட்டிகளில் தனது திறமையினை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்துள்ளார்.

தற்போது பாகிஸ்தானில் நடைபெற்ற சவாட் சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்று இலங்கைக்கும் வவுனியா மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற சவாட் சர்வதேச குத்து சண்டை போட்டியில் இலங்கையில் இருந்து 4 ஆண்கள் 9 பெண்கள் என 13 போட்டியாளர்கள் பங்குபற்றினர்.

இந்த போட்டியாளர்களில் 9 பேர் தங்க பதக்கத்தை வென்றுள்ளதுடன் 4 பேர் வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

தனது பிள்ளைகள் சிறுவயதில் தந்தையை இழந்துள்ளதாகவும் கூலி வேலைக்கு சென்று தான் 5 பெண் பிள்ளைகளையும் படிக்க வைத்ததாகவும் அவரது தாயார் குறிப்பிட்டுள்ளார்.

கந்தசாமி டிலக்சினி மேலும் தனது சாதனைகளைப் படைத்து உயர்வடைய எமது ஊடகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.