சஜித்தை தவிர வேறு எவரையும் பிரதமராக மக்கள் ஏற்க மாட்டார்கள் – எஸ்.எம்.மரிக்கார்

159 0

சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமராக பொதுஜன பெரமுன உறுப்பினர் நியமிக்கப்பட்டால் நாட்டு மக்கள் அதனை அங்கீகரிக்க மாட்டார்கள்.

சர்வதேசமும் அதனை வரவேற்காது. எனவே அடுத்த பிரதமராக சஜித் பிரேமதாசவையே நியமிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் (11) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் தயாராகவுள்ளது. அதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமின்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலக வேண்டும்.

மக்கள் ஆணையை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் , அவரால் நியமிக்கப்பட்ட பிரதமர் பதவி விலக மறுப்பது பொறுத்தமற்றது.

காரணம் அவர் மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர் ஆவார். நாட்டை ஸ்திரமற்றதாக்க இடமளிக்க முடியாது என தெரிவித்து , அதனைக் காரணமாகக் காண்பித்து பிரதமர் பதவி விலக மறுக்கின்றார்.

நாடு இப்போதும் ஸ்திரமற்ற நிலையிலேயே உள்ளது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஒரு நாளாவது ஜனாதிபதியாக பதவி வகிக்க வேண்டும் என்ற ஆசையிலேயே அவர் இவ்வாறு கூறுகின்றார்.

எனவே இவ்வாறான ஏமாற்றுக்கதைகள் கூறுவதை தவிர்த்து பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும். அதன் பின்னர் புதிய ஜனாதிபதியையும் , பிரதமரையும் தெரிவு செய்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியும்.

சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமராக பொதுஜன பெரமுன உறுப்பினர் நியமிக்கப்பட்டால் நாட்டு மக்கள் அதனை அங்கீகரிக்க மாட்டார்கள். சர்வதேசமும் அதனை வரவேற்காது.

பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த ஒருவர் பிரதமரானால் நாட்டின் பிரச்சினைகள் மேலும் உக்கிரமடையும். எனவே அடுத்த பிரதமராக சஜித் பிரேமதாசவை தெரிவு செய்வதே பொறுத்தமானதாக இருக்கும் என்றார்.