ஆட்சியதிகாரத்தை ஏற்கத் தயார்: சூழ்ச்சிகளுக்கு இடமளியோம் – மக்கள் விடுதலை முன்னணி

144 0

எமது தரப்பினரை ஒன்றினைத்து அரசாங்கத்தை ஸ்தாபிக்க வாய்ப்பளிக்கப்படுமாயின் ஆட்சியதிகாரத்தை ஏற்க தயார்.

குறுகிய காலத்திற்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைத்து தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்ய மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் அரசியல் சூழ்ச்சிகளினால் தெரிவு செய்யப்பட கூடாது. மக்களினால் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் ;(11) பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் 43 ஆவது படையணியின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு பாரதூரமான நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள போது அச்சமடைந்து பொறுப்பினை ஏற்றுக்கொள்ளாமல் பின்வாங்கும் தேவை எமக்கு கிடையாது. எமது தரப்பினரை ஒன்றினைத்து அரசாங்கத்தை ஸ்தாபிக்க வாய்ப்பளிக்கப்படுமாயின் ஆட்சியதிகாரத்தை ஏற்க தயார்.

பாராளுமன்றில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரம் காணப்படுமாயின் அவர்களின் தேவைக்கமையவே செயற்பட நேரிடும்.பிற தரப்பினரது விருப்பத்திற்கமைய செயற்படும் போது மக்களின் வெறுப்பை தொடர்ந்து பெற்றுக்கொள்ள நேரிடும்.

மக்கள் விடுதலை முன்னணியின் மூன்று உறுப்பினர்கள் மாத்திரமே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். மக்களால் வெறுக்கப்படும் தரப்பினருடன் ஒன்றினைந்து செயற்படுவது எப்பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையாது.

மக்களின் விருப்பத்திற்கமையவே பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். மக்களுக்கும்,பாராளுமன்றத்திற்கும் இடையில் பரஸ்பர வேறுப்பாடு காணப்படுகிறது.மக்களின் விருப்பத்திற்கமைய நியாயமான பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.அதுவே ஜனநாயகத்தின் இலட்சியமாகும்.

மக்களால் வெறுக்கப்படும் தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.குறுகிய காலத்திற்குள் சகல சவால்களையும் ஏற்றுக்கொள்ள.எம்மால் முடியும்.ஜனாதிபதி மற்றும் பிரதமர் அரசியல் சூழ்ச்சிகளினால் தெரிவு செய்யப்பட கூடாது மக்களினால் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம் என்றார்.