மட்டக்களப்பில் 19 துவிச்சக்கரவண்டிகளை திருடிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று திங்கட்கிழமை (11) உததரவிட்டார்.
மட்டு அரசடிபகுதியில் உள்ள தனியார் கம்பனி ஒன்றிற்கு முன்னால் சம்பவதினமான நேற்று நிறுத்திவைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டியை ஒருவர் திருடும் போது அந்த தனியார் கம்பனி பணியாட்கள் குறித்த நபரை மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர் .
இதனையடுத்து பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரியின் வழிகாட்டலில் சிறு குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் தினமும் காத்தான்குடியில் இருந்து பஸ்ஸியில் பயணித்து மட்டு நகருக்கு சென்று அங்கு வங்கிகள் தனியர் கம்பனிகள், சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் துவிச்சக்கரவண்டிகளை திருடிக் கொண்டு சென்று அதனை காத்தான்குடி பிரதேசத்தில் 17 ஆயிரம் ரூபா தொடக்கம் 25 ஆயிரம் வரைவில் விற்பனை செய்துள்ளதாகவும் சில துவிச்சக்கரவண்டிகளை பாகங்களாக்கி விற்பனை செய்துள்ளதாகவும் போதைவஸ்துக்கு அடிமையான நிலையில், பணத் தேவைக்காக துவிச்சக்கரவண்டிகளை திருடி விற்பனை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .
இதனையடுத்து திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 19 துவிச்சக்கரவண்டிகளையும் ; மீட்டுள்ளதுடன் அதில் 15 துவிச்சக்கரவண்டிகளை பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காட்டியுள்ள நிலையில், கைது செய்யப்பட்டவரை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.