ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு செல்லவில்லையென சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார் .
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறி அருகில் உள்ள நாடொன்றில் இருக்கின்றார் என பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ள சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன ஜனாதிபதி புதன்கிழமை நாடு திரும்புவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு செல்லவில்லை, அவர் நாட்டில் தான் இருக்கிறார் நான் தவறுதலாகக் கூறிவிட்டதாக ஏ.என்.ஐ. என்ற இந்திய செய்திச் சேவைக்கு மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் பெருமளவான மக்கள் ஒன்றுதிரண்டு கடந்த சனிக்கிழமை நடாத்திய போராட்டத்தையடுத்து தற்போது நாட்டில் அரசியல் நெருக்கடியொன்று தோற்றம் பெற்றிருக்கின்றது. குறிப்பாக ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்டதைத்தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எங்கே என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டின் அரசியல் நிலைவரம் தொடர்பில் பி.பி.சி சர்வதேச செய்திச்சேவையிடம் விளக்கமளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறி, அண்மையிலுள்ள பிறிதொரு நாட்டிற்குச் சென்றிருப்பதாகவும், இன்று (12) அல்லது நாளை (13) அவர் நாட்டிற்குத் திரும்பிவிடுவார் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதுகுறித்து உறுதிப்படுத்திக்கொள்வதற்காக ஏ.என்.ஐ செய்திச்சேவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டபோது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்ட வெளியேறிவிட்டதாக பி.பி.சி சர்வதேச செய்திச்சேவையிடம் தான் தவறாகக் கூறிவிட்டதாகவும், தற்போது ஜனாதிபதி நாட்டிலேயே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.