கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 பணம் அடுத்த மாதம் தான் கிடைக்கும்

119 0

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி நிறுவனங்களான கலை அறிவியல் கல்லூரி அல்லது தொழில் படிப்பில் சேரும்போது அந்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து இருந்தது.

இந்த உதவித்தொகை மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர்கல்வித்துறை சமீபத்தில் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

அதில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்ததற்கான சான்று, கல்லூரி அடையாள அட்டை, ஆதார், வங்கிக்கணக்கு உள்ளிட்டவற்றை மாணவியரிடம் இருந்து பெற வேண்டும் என கூறி இருந்தது. மாணவிகள் தங்களது கல்லூரிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் அல்லது நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம் என்று இணையதள முகவரி தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இதுவரை 2.2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாணவிகளுக்கு ரூ.1000 பணம் எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கல்வி வளர்ச்சி நாளான ஜூலை 15-ந்தேதி முதல் ரூ.1000 கிடைக்கும் என்று தகவல் வெளியான நிலையில் இப்போது அன்றைய தினம் திட்டம் தொடங்கி வைக்கப்படாது என தெரிகிறது. ஆகஸ்டு மாத இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் திட்டம் தொடங்கப்பட்டு அப்போது முதல் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.