மோடி வந்தபோது ஹாஸ்டலில் அடைத்து வைக்கப்பட்ட மாணவர் – என்ன காரணம்?

102 0

உத்தர பிரதேச முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் 2-வது முறையாக பொறுப்பேற்று 100 நாட்கள் முடிந்துவிட்டது. கடந்த 5-ம் தேதியுடன் 100 நாட்கள் ஆட்சி முடிவடைந்தது. இந்த கொண்டாட்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 7ம் தேதி சொந்த தொகுதியான வாரணாசி சென்றார். வாரணாசியில் நடைபெற்ற விழாவில், பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

நிறைவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தல், புதிய பணிகளுக்கு அடிக்கல் என மொத்தம் ரூ.1,774 கோடி மதிப்பிலான பணிகளை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்நிலையில், மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை குறித்து மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பனாரஸ் பல்கலைக்கழக மாணவர் ரோகித் ரானா கலந்துரையாடலில் பங்கேற்க இருந்தார்.

ஆனால், பிரதமர் மோடி வாரணாசிக்கு வந்தடைந்ததும், மாணவர் தங்கியிருந்த ஹாஸ்டலில் போலீஸ்காரர் ஒருவர் ரானாவை எங்கும் செல்லவிடாமல் அடைத்து வைத்திருந்தார். இதனால் ரானா கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனது. பிரதமர் மோடி நிகழ்ச்சி முடிந்து சென்றதும் போலீஸ்காரர் அங்கிருந்து அகன்றார். இதுதொடர்பாக, மாணவர் ரோகித் ரானா கூறுகையில்,

மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை பற்றி விவாதிக்க சில மாணவர் அமைப்புகளின் கூட்டங்களில் சமீபத்தில் கலந்துகொண்டேன். ஆனால் நான் காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் தீவிர கண்காணிப்பில் இருந்தேன் என்று எனக்குத் தெரியாது.

வியாழன் காலை ராஜாராம் விடுதியில் உள்ள எனது அறை எண் 101-க்கு ஒரு போலீஸ்காரர் வந்து, பிரதமர் நகரத்தை விட்டு வெளியேறும் வரை வெளியே செல்ல அனுமதி இல்லை என என்னிடம் கூறினார். அந்தப் போலீஸ்காரர் எனது அறையில் சுமார் 6 மணி நேரம் தங்கி பிரதமர் மோடி டெல்லி திரும்பிய பிறகே அங்கிருந்து சென்றார் என தெரிவித்தார். பிரதமருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த மாணவரை போலீசார் ஹாஸ்டலில் அடைத்து வைத்த சம்பவம் வாரணாசியில் பரபரப்பை ஏற்படுத்தியது.