பாஜக செயற்குழு உறுப்பினர் கைது: அண்ணாமலை கண்டனம்

163 0

பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கடந்த ஜனவரி மாதம் தனது டுவிட்டர் பக்கத்தில் இரு மதத்தினர் இடையே மோதலை உருவாக்கும் வகையில் அடையாளம் தெரியாத நபர் பேசிய வீடியோவை பகிர்ந்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் அவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் நேற்று சவுதாமணியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது

: சவுதாமணியை தி.மு.க. அரசு பழிவாங்கும் நோக்கோடு கைது செய்துள்ளது. சமூக ஊடகங்களில் யாரோ வெளியிட்ட பதிவை இவர் மற்றொருவருக்கு பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் ஊறு விளைவுக்கும் விதமாக வெளிப்படையாக கருத்துக்களை பதிவு செய்பவர்கள் தமிழகத்தில் சுதந்திரமாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் 8 கோடி இந்துக்கள் வணங்கும் தெய்வங்களை, ஆன்மீக தமிழ் கலாச்சாரங்களை, தமிழக மக்களின் ஆன்மீக பழக்க வழக்கங்களை, சமூக ஊடகங்கள் மூலம் கேலி கிண்டல் செய்து கொச்சைப் படுத்தி பதிவுகள் போடுவது இன்று வாடிக்கையாகி விட்டது.

மதுரையில் சமீபத்தில் நடந்த ஒரு ஊர்வலத்தில் தமிழ் கடவுள்களை பற்றி மோசமாக விமர்சித்துக் கொண்டே ஊர்வலம் போனார்கள். சிலர் தேசத்தின் ஒற்றுமைக்கு எதிராக சிறுபான்மையின சகோதரர்களை தூண்டிவிடும் வகையில் பிரசங்கம் செய்கிறார்கள். இவர்கள் மீதெல்லாம் பல்வேறு இடங்களில் புகார்கள் கொடுத்தும் இதுவரை திமுக அரசும், காவல்துறையும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதே சமயம் சவுதாமணி மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டிற்கு தகுந்த விளக்கம் கொடுக்கப்பட்ட பிறகும் பா.ஜ.க.வை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். தி.மு.க. அரசு உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்