குரலற்றவர்களின் குரல் அமைப்பின் பெயர்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கண்டனம்

118 0

ஜூலை 9 ஆம் திகதி இலங்கை முழுவதும் தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள்,சிவில் அமைப்புகள் பெயரில் அழைப்பு விடப்பட்டுள்ள போராட்டத்தில் தமது அமைப்பின் பெயர்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள அமைப்புக்கள் சில கண்டனம் தெரிவித்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பது தொடர்பில் கூட்டப்பட்ட கூட்டத்தில் பங்கெடுத்திருந்த போதும் தமது அமைப்பு ஆதரவு வழங்குவது தொடர்பிலான நிலைப்பாடு எதனையும் எடுத்திருக்கவில்லையென குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் கோமகன் தெரிவித்துள்ளார்.

ஏற்பாட்டு கூட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளான காணிகள் விடுவிப்பு,அரசியல் கைதிகள் விடுதலை,காணாமல் ஆக்கப்பட்டோரினை கண்டறிதல்,பௌத்தமயமாக்கல் உள்ளிட்ட ஐந்து முக்கிய அம்சங்கள் தொடர்பிலான நிலைப்பாட்டையும் தமிழர் தேசமாக தமிழ்த்தேசியம் சார்ந்ததே என ஏற்பாட்டாளர்களிடம் கோரியிருந்தோம்.

யாழ்.போராட்டத்திற்கு அழைப்பு

ஆயினும் அவர்களிடமிருந்து திருப்திகரமான பதில்கள் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பிலான நிலைப்பாடு எதனையும் எடுத்திருக்காத நிலையில் யாழ்ப்பாணத்திலும் போராட்டத்தை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு எமது ஆதரவு பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக கோமகன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக் கோரி யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ். நகர் நோக்கி நாளை காலை 9 மணிக்கு துவிச்சக்கர வண்டிப் பேரணியொன்றை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்திற்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், செம்முகம் ஆற்றுகைக்குழு, தேசிய கலை இலக்கிய பேரவை, தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவை, யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம், குரலற்றவர்களின் குரல், பன்மைத்துவ மக்களாட்சி மன்றம், புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனிஸ கட்சி,சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஆகிய பொது அமைப்புகள் ஆதரவளிப்பதாக ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.