‘அபேவை பிடிக்கவில்லை, அதனால் கொலை செய்தேன்’ – ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ கொலையில் கைதானவர் வாக்குமூலம்

123 0

தேர்தல் பிரச்சாரத்தில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (67) சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவை தேர்தல் நாளை நடை பெறுகிறது. இதையொட்டி ஆளும் லிபரல் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷின்சோ அபே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் நேற்று ஜப்பானின் நாரா நகரில் பிரச்சாரம் செய்தார்.

அந்த நகரின் ரயில் நிலையத்தின் முன்பு மக்கள் மத்தியில் ஷின்சோ அபே பேசினார். அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களில் பின்னால் இருந்து இளைஞர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டார். இதில் ஷின்சோ அபேவின் கழுத்து, முதுகில் குண்டுகள் பாய்ந்தன. அதே இடத்தில் அவர் சரிந்து விழுந்தார்.

அங்கிருந்த மருத்துவர்கள் விரைந்து வந்து ஷின்சோ அபேவுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் நாரா மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து நாரா மருத்துவ பல்கலைக்கழக நிர்வாகம் கூறும்போது, ‘‘ஷின்சோ அபே முதுகில் பாய்ந்த குண்டு அவரது இதயத்தை துளைத்து விட்டது. சுமார் 5 மணிநேரம் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தோம். எனினும் உயிரிழந்துவிட்டார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

கொலையாளி யாமாகாமியை (41) கைது செய்துள்ளோம். கடற்படையின் முன்னாள் வீரரான அவர் குறித்த முழுமையான விவரங்களை திரட்டி வருகிறோம். 3டி தொழில்நுட்பத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மூலம் ஷின்சோ அபேவை சுட்டுள்ளார். ‘அபேவை பிடிக்கவில்லை. அதனால் கொலை செய்தேன்’ என்று வாக்குமூலம் அளித்துள்ளார். கொலைக்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.

ரகசிய இடத்தில் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். நாரா நகரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு ஏராளமான வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதின், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உட்பட உலக தலைவர்கள் பலரும் மறைந்த ஷின்சோ அபேவின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.