ஆபத்தான நிலையில் தமிழர் பகுதி நோயாளர்கள்: மாட்டுவண்டியில் சிகிச்சை

270 0

எரிபொருள் தட்டுபாடு காரணமாக நோயாளிகளை மாட்டுவண்டியில் வைத்து சிகிச்சையளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு-புதுகுடியிருப்பு பகுதியில் இன்று(08) நோயாளர் காவு வண்டி இன்மையால், நோயாளர் ஒருவரை வைத்தியசாலைக்கு மாட்டுவண்டி ஊடாக அழைத்து சென்றுள்ளனர்.

மாட்டு வண்டியில் நோயாளருடன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் வரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன் சென்றுள்ளார்.

இந்நிலை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “இந்த நாடு முன்னேறுவதற்குரிய எந்த ஒரு அறிகுறியும் இல்லை. இப்படிப்பட்ட சிங்கள அரசாங்கத்துடன் நாங்கள் இணைந்து வாழக்கூடிய நிலை இல்லை.

மேலும், தமிழர்களை பொறுத்தமட்டில் பிரிந்து தனியாக செல்லவேண்டிய காலம் இயற்கையாகவே உருவாகிவிட்டது.

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக நோயாளர்கள் உயிரிழக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாங்கள் இந்த முட்டாள் தனமான அரசாங்கத்தை நம்பவில்லை. அதனால் தான் நாங்கள் எங்களுக்கு தனி ஈழம் கோரி போராட்டத்திற்கு சென்றோம். மேலும், 300 க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளை அரசாங்கம் தடை செய்துள்ளது.

இவ்வளவு வளங்களை வைத்து கொண்டு இன்று டொலரினை கேட்டு கெஞ்சி கொண்டிருக்கிறார்கள்”என கூறியுள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக தமக்கு எந்தவிதமான எரிபொருள்களும் வழங்கப்படவில்லை என இலங்கை தமிழரசு கட்சியினர் புதுக்குடியிருப்பு நகரில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து, கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தவர்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந் அவர்களை சந்தித்துள்ளனா்.

தங்களின் நிலைப்பாடுகளை எடுத்து கூறியதுடன் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள், கடற்தொழிலாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இருந்தாலும் ஒரு ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையம் மாத்திரமே இருக்கிறது.

அதில் கிடைக்கின்ற எரிபொருளை எமது பகுதிகளிலும் அத்தியாவசிய தேவைகள் மற்றும் குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு பகிர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

விவசாயிகளுக்கு அறுவடைக்காக புதுக்குடியிருப்பு பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு ஒரு பவுசர் டீசலை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த பிரச்சினைகளை அரசாங்க அதிபரிடம் கலந்துரையாடி முடிந்தளவு பிரச்சினைக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Gallery Gallery Gallery