சனிக்கிழமை போராட்டம் : ஜே. ஆரை உதாரணம் கூறிய பிரதமர் ரணில்

124 0

நாட்டின் பொருளாதாரம்  மற்றும் அரசியல் நெருக்கடிகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் மக்களின் எதிர்ப்பு போரட்டங்களும் வலுப்பெற்று வருகின்றன.

இவ்வாறனதொரு சூழ்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டத்திற்கு 9 ஆம் திகதி சனிக்கிழமையுட 3 மாதங்கள் நிறைவடைகின்றன.

இதனை முன்னிட்டு அன்றைய தினம் காலி முகத்திடல் பெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஏற்பாட்டளர்கள், போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பிற்கு வருமாறு மக்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளனர்.

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நெருக்கடிகளை கொடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த போராட்டம் கட்டுப்படுத்த பல முயற்சிகள் திரைமறையில் எடுக்கப்பட்டாலும் அவை சாத்தியப்படுவதாக தெரியவில்லை.

இவ்வாறானதொரு நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் பாராளுமன்றத்தில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து 9 ஆம் திகதி சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் குறித்து வினாவியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சி காலத்திலும் பெரும் போரட்டமும் வேலை நிறுத்தமும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இன்றைய சூழலை போன்றே அன்றும் கொழும்பிற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவே தீர்மானித்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாள் இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் சங்கத்தை ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அழைத்தார். நாளை போராட்டத்தில் நீங்களும் பங்குப்பற்றுவீர்களா என ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அவர்களிடம் கேட்டார்.

பதற்றத்துடன் அவர்கள் இல்லை என்றனர். இல்லை நீங்களும் அதில் போராட்டத்தில் பங்குப்பற்றுவீர்கள் என கூறிவிட்டு ஜனாதிபதி ஜே.ஆர். அவ்விடத்திலிருந்து சென்று விட்டார்.

மறுநாள் போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டது. பேரூந்துகள் சேவையில் இல்லை. இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கொழும்பிற்கு வர முடியாது போனது என தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த கதை இன்றைய சூழலுக்கு பொறுந்தாது என குறிப்பிட்டார்.