பேக்கரிகள் முடங்கும் அபாயம் ; 3500 பேக்கரிகள் மூடப்பட்டன : 50 வீதமானோர் தொழில் இழப்பு

113 0

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இதுவரையான காலப்பகுதியில் 7,000 பேக்கரிகளில், 3,500 க்கும் அதிகமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளது. 3 இலட்சம் தொழிலாளர்களில் 50 வீதமானோர் தொழிலை இழந்துள்ளனர்.

இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேக்கரிகள் உற்பத்தி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளதுடன் அதன் காரணமாக பேக்கரிகள் எதிர்வரும் நாட்களுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில்,
பேக்கரிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல போதுமான எரிபொருள், மண்ணெண்ணெய், எரிவாயு கிடைப்பதில்லை.

மேலும் கோதுமைக்கு பாரியளவிலான தட்டுப்பாடு நிலவுகிறது. இருப்பினும் தற்போது எரிபொருள் நெருக்கடி நிலைமை காரணமாக பேக்கரிகள் எந்தவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுத்து செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது.

இது தொடர்பில் பேக்கரி சங்கத்தினால்  பிரதமர், எரிசக்தி அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சு உட்பட பலரிடம் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் தீர்வுகள் கிடைக்கவில்லை.

அரசாங்கத்தினால் பேக்கரிகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் பெற்றுக்கொடுப்பட்டாலும் பேக்கரிகள் மற்றும் பேக்கரி ஊழியர்களுக்கு எரிபொருள் பெற்றுக் கொடுக்க படவில்லை.

எரிபொருள் இன்மையால் பேக்கரிகள் உரிமையாளர்கள், ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களின் சீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரையான காலப்பகுதியில் 7,000 பேக்கரிகளில் 3,500 க்கும் அதிகமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளது. 3 இலட்சம் தொழிலாளர்களில் 50 வீதமானோர் தொழிலை இழந்துள்ளனர்.

பேக்கரிகளில் தொழில் புரியும் ஊழியர்களுக்கு அவர்கள் சேவைகளுக்கு வருவதற்கான எரிபொருள் இன்மையால் பேக்கரிகளை செயற்பாடுகளை முன்னெடுத்து செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.அவர்கள் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக பல நாட்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள்.இந்நிலை தொடருமாக இருந்தால் பேக்கரிகள் முடங்கும்.

அதற்கமைவாக, பொறுப்பான தரப்பினர் இது தொடர்பில் ஆராய்ந்து உரிய தீர்வை பெற்று தர வேண்டும். வரும் இரு நாட்களில் பேக்கரிகள் சம்பூர்ணமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருள் பெற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆனால் பேக்கரிகள் தொடர்பில் எதுவித தீர்மானங்களும் இல்லை.

எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமை நீடித்தால் பேக்கரிகளை மூடிவிட்டு வீதிகளில் போராடுவோம். சங்கம் சார்பில் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கின்றோம். எதிர்வரும் திங்கட்கிழமை பின்னர் வீதிகளில் இறங்கிப் போராடுவோம் என்றார் .