இறுதிக் கட்ட யுத்தத்தின்போது திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன் உட்பட பல போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளில் இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் விபரங்களை வெளியிடுவதாக இராணுவம் கூறியிருந்தபோதிலும், கடந்த விசாரணைக்கு அரசாங்கத் தரப்பு சட்டத்தரணியோ, முல்லைத்தீவு மாவட்ட 58ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்ய குணரத்ன ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இதன்போது அடுத்த தடவை இராணுவத் தளபதி மன்றில் முன்னிலையாகாவிட்டால் பிடியாணை பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் விசாரணையில் மேஜர் ஜெனரல் சாணக்ய குணரத்ன முன்னிலையாகியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
அத்துடன் இன்று இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் விபரங்கள் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.