ராஜபக்ஷாக்களிடமிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான இறுதிப் போராட்டமாக அமைய வேண்டும் – அனைவருக்கும் ஹிருணிகா அழைப்பு

107 0

ராஜபக்ஷாக்களிடமிருந்து நாட்டை மீட்பதற்கான இறுதி போராட்டமாக 09 ஆம் திகதி போராட்டம் அமைய வேண்டும். புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் அனைவரையும் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுப்பதாக ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

புதனன்று ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்ததைப் போன்று , மீண்டுமொரு முறை நுழைந்து பலவந்தமாகவேனும் உட்பிரவேசித்து ஜனாதிபதியை சந்தித்து பதவி விலகுமாறு கோருவதற்கு அனைத்து பெண்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 07 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சனிக்கிழமை முற்பகல் புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் அனைவரையும் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

இதுவே ராஜபக்ஷாக்களிடமிருந்து நாட்டை மீட்பதற்கான இறுதி போராட்டமாக அமைய வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என அனைத்து கட்சிகளும் ஒரு பாரிய சுவராக ஒன்றிணைய வேண்டும்.

இதனை எவராலும் தோல்வியடையச் செய்ய முடியாது. காரணம் தற்போதுள்ள நிலைமையில் எந்த கட்சியாலும் தனித்து எதனையும் செய்ய முடியாது.

குறுகிய காலத்திற்கு சகல தரப்பினரும் தமது அரசியல் கொள்கைகளிலிருந்து விலகி, மக்களுக்கான ஒருமித்த மனதுடன் செயற்பட வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை எந்தவொரு கட்சியாலும் ஆட்சியமைக்க முடியாது.

இந்த போராட்டத்தின் பயனை மக்கள் அடைய வேண்டும். மாறாக ஒரு கட்சி ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்யும் போது, ஏனைய கட்சிகள் அதனை விமர்சித்துக் கொண்டிருக்கக் கூடாது.

கோட்டாபய ராஜபக்ஷ அனைவருக்கும் பொது எதிரி ஆவார். எனவே அனைவரும் ஒன்றிணைந்து அவரை பதவி விலகச் செய்ய வேண்டும்.

கடந்த ஓரிரு தினங்களாகவே ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்கு நேரியாடியாகச் சென்று, அங்குள்ள நிலைவரங்களை அவதானித்து , மிகசூட்சுமமாக திட்டமிட்டே நாம் அன்று ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முற்பட்டோம்.

ஆனால் அதனைக் கூட அறியாதளவிற்கு எமது நாட்டின் புலனாய்வு பிரிவு பலவீனமாகவுள்ளது. நாம் அங்கு சென்ற அன்றைய தினம் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தோரை பணி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அது தவறாகும். அவர்கள் மீது எந்த தவறும் கிடையாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இயலாமையை மறைப்பதற்காக ஏனையோரை பழிவாங்குவது பொறுத்தமற்றது.

அன்றைய தினம் ஜனாதிபதி என்னை சந்திக்க அழைப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் பிம்ஸானி தெரிவித்தார். எனினும் அவருடனான சந்திப்பை நான் எனது முகநூலில் நேரடி ஒளிபரப்பு செய்வேன் என்று கூறிய பின்னர் அதற்கு பதில் எதுவும் வழங்கப்படவில்லை.

மாறாக எவ்வித காரணமும் இன்றி எம்மை கைது செய்தனர். எம்மை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு தகுந்த காரணம் இன்மையால் , பொலிஸ் பிணையில் விடுதலை செய்தனர்.

கைது செய்யப்பட்ட எம்மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. எவ்வாறிருப்பினும் இந்த அச்சுறுத்தல்களைக் கண்டு நாம் அஞ்சப் போவதில்லை.

இதே போன்று மீண்டும் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று , நுழைவாயிலை உடைத்தெறிந்தேனும் உள்சென்று , ஜனாதிபதியிடம் நேரடியாகவே நீங்கள் பதவி விலக வேண்டும் எனக் கூறுவதற்கு பெண்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். பெண்கள் வீதிக்கு இறங்கினால் பாதுகாப்புபடையினரும் அஞ்சுவர். எனவே நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த எம்முடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.