நாளைய ஆர்ப்பாட்டத்தை தடுத்து உத்தரவிடுமாறு நீதிமன்றில் பொலிஸார் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

90 0

அரசாங்கத்திற்கு எதிராக பாரிய மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நாளை 9 ஆம் திகதி சனிக்கிழமை  முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளை 9 ஆம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி பாரிய ஆர்ப்பாட்டம் நடாத்தப்படவுள்ள நிலையில், கொழும்பின் பாதுகாப்புக்கு 8 ஆயிரம் பொலிஸாரும், இராணுவத்தினரும் மேலதிகமாக அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இந்நிலையில், நாளை 9 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தை தடுத்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸார் கொழும்பு மேலதிக நீதிவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் முன்வைத்த கோரிக்கையை நீதிவான் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, நாளையதினம் இடம்பெறவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை தடுத்து உத்தரவு ஒன்றினை பிறப்பிக்குமாறு மாளிகாவத்தைப் பொலிஸார் கொழும்பு மேலதிக நீதிவான் ரி.என்.எல். மஹவத்தை முன்னிலையில் முன்வைத்த கோரிக்கையையும் நீதிவான் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவையும் அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரி தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக நேற்று 07 ஆம் திகதி  மத குருமார் வீதியில் இறங்கி போராட்டங்களை ஆரம்பித்திருந்த நிலையில், இன்று 08 ஆம் திகதி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தினை தடுத்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கறுவாத்தோட்ட பொலிஸார் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க நிராகரித்து உத்தரவிட்டார்.

இதேவேளை, நாளையதினம் 9 ஆம் திகதி சனிக்கிழமை அரசாங்கத்திற்கு எதிராக பாரிய மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.