இலங்கைக்கு உதவுவதானது ராஜபக்ஷ குடும்பத்திற்கு உதவுவதைப் போன்றதாகும் என்ற நிலைப்பாடு சர்வதேசத்தின் மத்தியில் தோற்றம் – கிரியெல்ல

103 0

இலங்கைக்கு உதவுவதானது ராஜபக்ஷ குடும்பத்திற்கு உதவுவதைப் போன்றதாகும் என்ற நிலைப்பாடு சர்வதேசத்தின் மத்தியில் தோற்றம் பெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள போதிலும், சர்வதேச ஊடகங்களுக்கு அதற்கு முரணான செய்திகளையே வெளியிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள போதிலும், இணக்கப்பாடொன்றை எட்டாமலேயே பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடன் மீள செலுத்தல் காலம் மறுசீரமைக்கப்பட்டதன் பின்னரே சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடொன்றை எட்ட முடியும்.

நியூயோர்க்கில் ராஜபக்ஷாக்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்கள் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை மீதான நம்பிக்கையை இல்லாமல் செய்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தில் 50 சதவீதத்திற்கும் அதிக உரிமத்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளே கொண்டுள்ளன.

இந்நிலையில் உலக நாடுகளின் மத்தியில் இலங்கைக்கு உதவுவதானது ராஜபக்ஷ குடும்பத்தி;ற்கு உதவுவதைப் போன்றது என்ற நிலைப்பாடும் தோற்றம் பெற்றுள்ளது.

அது மாத்திரமின்றி முஸ்லிம் நாடுகள் உள்ளிட்ட பல உலக நாடுகளையும் இந்த அரசாங்கம் பகைத்துக் கொண்டுள்ளது. அதன் காரணமாகவே சர்வதேச உதவிகள் கிடைப்பதில் இந்தளவிற்கு தாமதம் ஏற்படுகிறது.

எனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகாமல் சர்வதேசத்திடமிருந்து எந்த உதவிகளையும் எதிர்பார்க்க முடியாது. காரணம் கிடைக்கப்பெறும் நிதி உதவிகள் முறையாக மக்களை சென்றடையுமா என்ற சந்தேகம் சர்வதேசத்தின் மத்தியில் நிலவுகிறது என்றார்.