ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே மீது துப்பாக்கி சூடு

185 0

ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வருகிற 10-ந்தேதி (ஞாயிற் றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணி அளவில் அவர் மேற்கு ஜப்பானின் நாரா நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். ஏராளமான பொதுமக்கள் இந்த பிரசார கூட்டத்துக்கு திரண்டு வந்து ஷின்சோ அபேயின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவன் ஷின்சோ அபேயை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டான். அந்த குண்டு அவரது மார்பில் பாய்ந்தது. இதனால் ஷின்சோ அபே தனது நெஞ்சை பிடித்தபடி மயங்கி கீழே சரிந்தார். உடனே அவரது பாதுகாவலர்கள் அவரை நோக்கி வேகமாக ஓடினார்கள். அதற்குள் அவர் கீழே விழுந்தார். அவரது மார்பு பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறி சட்டை முழுவதும் ரத்தம் காணப்பட்டது.

உடனே அவரை பாதுகாவலர்கள் அங்கிருந்து தூக்கிச் சென்றனர். அவரை உடனடியாக ஹெலிகாப்டரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். உடனடியாக டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தில் முதலில் துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் கேட்டதும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது குண்டு பாய்ந்ததை அறிந்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த உடனே துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவனது பெயர் யமாஹமி (வயது 41). அவன் அருகில் நின்றபடியே ஷின்சோ அபேயை துப்பாக்கியால் சுட்டான். இதற்காக அவன் சிறியரக கைத்துப்பாக்கியை பயன்படுத்தினான். யமஹாமி துப்பாக்கியால் சுட்டதை அங்கு நின்றுக் கொண்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர் தான் பார்த்துள்ளார். அவர்தான் அவனை போலீசாருக்கு அடையாளம் காட்டினார். ஷின்சோ அபேயை, யமாஹாமி எதற்காக சுட்டான்? அவன் எப்படி பொதுக்கூட்ட மேடை அருகே வந்தான் என்பது தொடர்பாக போலீசார் அவனிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஷின்சோ அபேயால் சுவாசிக்க முடியவில்லை. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.

ஷின்சோ அபே சுடப்பட்ட தகவல் அறிந்ததும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷ்கிடாவும், மந்திரிகளும் டோக்கியோவுக்கு திரும்பியுள்ளனர். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்ட சம்பவம் ஜப்பான் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.