அரசுக்கு எதிராக இன்று பல ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களால் முன்னெடுப்பு

134 0

எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை நாட்டில் இடம்பெறவுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையில், நுகெகொட மேம்பாலத்திற்கு அருகில் சைக்கிள் பேரணியொன்று இடம்பெற்றது.

இந்தப் பேரணி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சர்வகட்சி ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த சைக்கிள் அணிவகுப்பு பேரணி இடம்பெற்றது.

நுகேகொட மேம்பாலத்திற்கு அருகாமையில் குறித்த சைக்கிள் பேரணி ஆரம்பித்து கொழும்பில் உள்ள பொது நூலகத்திற்கு அருகில் குறித்த பேரணி நிறைவடைந்தது, அதன் பின்னர் பொது ஒன்றுகூடல் நடைபெற்றது. இதேபோன்று 9 ஆம் திகதி இடம்பெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், வத்தளையில் இருந்து கொழும்பு நோக்கி பொதுமக்கள் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் சில அமைப்புக்களின் தலைவர்கள் ஒல்கொட் மாவத்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு உள்நுழைவதை தடுத்து கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலகுமாறு பௌத்த பிக்குகள் கோரிக்கை விடுத்து கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.