ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகினால் மாத்திரமே சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் – ராஜித

221 0

ஜூலை 9 ஆம் திகதி முதல் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்படுவோம்.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகினால் மாத்திரமே சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.

மக்களின் பிரச்சினை மற்றும் வலியுறுத்தல் ; தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவில்லை. நாட்டின் சுகாதார கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலைகளில் மருந்து இல்லை,தனியார் வைத்தியசாலைக்கு சென்றால் மருத்து கட்டணத்தை பார்த்து மனநிலை பாதிக்கப்படும் நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன சபையில் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் ;06 ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றம் கூடிய போது ஒத்திவைப்பு விவாதத்தை தொடர்ந்து கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி உட்பட பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தினால் எரிபொருள் விநியோக கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்பட்டு கல்வி,சுகாதாரம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் நெருக்கடியினால் நடுத்தர மக்கள் தொழிற்துறையினை  இழந்துள்ள நிலையில் ,எதிர்வரும் காலங்களில் தொழிலின்மை வீதம் அதிகரிக்க கூடும்.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் குறுகிய மற்றும் நீண்டகால திட்டம் ஏதும் கிடையாது.

எரிபொருள் கப்பல் வரும் என  வலுசக்தி அமைச்சர் சபையில் குறிப்பிடுகிறார் ஆனால் எரிபொருள் கப்பல் வருவதில்லை,எரிபொருளுக்கான வரிசை நீண்டு,பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது.

அத்தியாசிய பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது, தேவையான உணவு பொருட்கள் கையிருப்பில் உள்ளது என வர்த்தகத்துறை அமைச்சர் சபையில் குறிப்பிடுகிறார்.

ஆனால் சந்தையிலும்,கடைகளிலும் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.எதிர்வரும் காலங்களில் உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள வேண்டிய தன்மையே காணப்படுகிறது.

சிறந்த முறையில் காணப்பட்ட இலங்கையின் சுகாதாரத்துறை அச்சுறுத்தல் நிலைக்கு செல்கிறது என யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது .

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் யுனிசென் நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி ; மொத்த சனத்தொகையில் 22 சதவீதமானோர் உணவு பெறலை தவிர்த்துள்ளதுடன்,86 சதவீதமானோர் உணவு உட்கொள்ளும் வேளையினை தவிர்த்துள்ளார்கள்.

மொத்த சனத்தொகையில் 58 சதவீதமானோருக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்,அத்துடன் 17 சதவீதமானோர் அவதான நிலையில் உள்ளதுடன்,இப்பிரச்சினைகளுகளுக்கு தீர்வு காணாவிடின் பாரிய நெருக்கடியினை எதிர்க்கொள்ள நேரிடும்.

2022ஆம் ஆண்டு பெரும்போக விவசாயம் 50 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து 17 இலட்சம் சிறுவர்கள் மந்த போசனை நிலையினை அடைந்துள்ளார்கள்.

தனியார் வைத்தியசாலைகள் எவ்வித கண்காணிப்பற்ற வகையில் செயற்படுகிறது.தனியார் வைத்தியசாலையில் மூளை சம்பந்தமான சத்திரசிகிச்சைக்கு 112 இலட்சம் கட்டணம் அறவிடப்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது,தனியார் வைத்தியசாலைக்கு சென்றால் கட்டணத்தை பார்த்து மனநிலை பாதிக்கும் நிலை காணப்படுகிறது.

நாடு பாரதுரமான நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளதை ஜனாதிபதி அறியவில்லை.மக்கள் படும் துன்பம் தொடர்பில் ஜனாதிபதிக்கு எவ்வித அக்கறையும் கிடையாது.

அவர் பதுங்கு குழியில் உள்ளார்.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என  மத தலைவர்கள் உட்பட ,முழு நாடும் வலியுறுத்தும் போது அவர் பொறுப்பற்ற வகையில் உள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக நாளை மறுதினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் ஒன்று கூடவுள்ளார்கள்.மக்கள் போராட்டத்தில் நாங்களும் ஒன்றினைவோம்.ஜனாதிபதி பதவிவிலகும் வரை போரட்டத்தில் ஈடுப்படுவோம் என்றார்.