அடுத்த வாரம் 33 ஆயிரம் மெற்றிக்தொன் சமையல் எரிவாயு கிடைக்கவுள்ளது – பிரதமர் ரணில்

114 0

ஜூன் 11 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை நாட்டிற்கு 33.000 மெற்றிக் தொன் சமையல் எரிவாயு கிடைக்க இருக்கின்றது.

எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயுவை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் கொழும்பில் சமையல் எரிவாயு விநியோகத்துக்கு விசேட வேலைத் திட்டம் அமைத்துள்ளோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ;6 ஆம் திகதி புதன்கிழமை பிரதமரிடமான கேள்வி நேரத்தின் போது ஆளும் கட்சி உறுப்பினர் லலித் வர்ணகுமார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

திட்டமிடப்பட்டுள்ளதன் பிரகாரம் எதிர்வரும் 9ஆம் திகதி சமையல் எரிவாயு சிலிண்டர் தொகை நாட்டுக்கு வந்த பின்னர்

ஜூலை 11ஆம் திகதி அல்லது 12ஆம் திகதியில் கொழும்பு நகரம் பூராகவும் 140 இடங்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

அந்த இடங்கள் அனைத்துக்கும் 100 சிலிண்டர் அடிப்படையில் மொத்தமாக ஒரு இலட்சத்தி 40 ஆயிரம் சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் .

அதன் பின்னர் கொழும்பு நகரில் நாளாந்தம் 12.5 கிலோ கிராம் எடை கொண்ட சிலிண்டர் 25 ஆயிரம் விநியோகிக்க நடவடிக்கை எடுப்போம்.

அதற்கு சமகாலத்தில் பேக்கரிகளுக்கும் சிறு வர்த்தக நிலையங்களுக்கும் சிலிண்டர்களை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக நாடு பூராகவும் ஒரு இலட்சத்தி 12 ஆயிரம் சிலிண்டர்களை எதிர்வரும் 11 அல்லது 12 ஆம் திகதியில் இருந்து நாளாந்தம் விநியோகிக்க நடவடிக்கை எடுப்போம் .

தற்போது இருந்து வரும் எரிவாயு தட்டுப்பாட்டை இந்த மாதம் இறுதியாகும் போது அல்லது ஆகஸ்ட் மாதம் ஆரம்பத்தில் இல்லாமலாக்குவோம்.

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம் வரைக்கு 33 ஆயிரம் மெட்ரிக் தொன் காஸ் கிடைக்க இருக்கின்றது. இவற்றை நுகர்வோருக்கு தொடர்ந்து விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

இந்த நடவடிக்கைகள் நாட்டில் நிலவும் காலநிலை மற்றும் கடலில் நிலவும் காலநிலையைப் பொறுத்து மாற்றமடையலாம். எனினும் எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயுவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.