முகக்கவசத்தால் மூடப்பட்ட குழந்தையின் முகம் – வைரல் போட்டோவால் எழுந்த விவாதம்

199 0

நியூசிலாந்தில் விமானம் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், ஒரு குழந்தையின் முகம் முழுவதும் முகக்கவசத்தால் முடப்பட்டு, கண்கள் வழியாகப் பார்ப்பதற்கு மட்டும் மாஸ்கில் சிறு ஓட்டைகள் இடம்பெற்றிருந்தது. அந்தப் படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அந்தப் புகைப்படம் ஜூலை 1-ஆம் தேதி நியூசிலாந்தின் ஆக்லாந்திலிருந்து வெலிங்டனுக்கு புறப்பட்ட விமானத்தில் எடுக்கப்பட்டது. அப்புகைப்படத்தில் பெரியவர்கள் அணியும் முகக்கவசத்தில் மேலே இரு துளைகள் மட்டும் இடப்பட்டு அந்தக் குழந்தைக்கு அணிவித்திருந்தனர்.

ஜாண்டர் ஓப்பர் மேன் என்ற நபர்தான் அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். ஆனால், சமூக வலைதளத்தில் அந்தக் குழந்தையின் புகைப்படம் தொடர்பாக விவாதமே எழுந்தது. சிலர் இதனை பேய்ப் படத்தில் காட்சி போல் உள்ளது என்று வருணித்திருந்தனர். சிலர் குழந்தைகள் மீது செலுத்தும் வன்முறை என விமர்சித்திருந்தனர். மேலும் இவ்வாறு குழந்தைக்கு மாஸ்க் அணிவிப்பதன் மூலம் கோவிட் தடுக்கப்படுமா எனவும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்த நிலையில், இதற்கு ஜாண்டர் ஓப்பர் மேன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, “அந்தக் குழந்தை மிக மகிழ்ச்சியாக துள்ளிக் குதித்து கொண்டிருந்தது. இது விமானத்திலிருந்து இறங்குவதற்கு காத்திருந்த நேரத்தை ரசனையாக மாற்றியது. அந்த மாஸ்க் குழந்தையின் முகத்திற்கு நெருக்கமாக அணிவிக்கப்படவில்லை” என்றார்.

மருத்துவர்கள் குழந்தைகளுக்கு இவ்வாறு மாஸ்க் அணிவதில் தப்பில்லை என்றும், இது ஆரோக்கியமான முறைதான் என்றும் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்து விதிமுறைபடி உள்ளூர் விமானங்களில் பயணிக்கும் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். அதற்காகவே அக்குழந்தையின் பெற்றோர்கள் மாஸ்கை குழந்தைக்கு அணிவித்திருக்கிறார்கள்.