மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு ரஜினி, கமல் வாழ்த்து

206 0

மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் கேரளாவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை பி.டி. உஷாவும் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இருவரும் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக ஆகின்றனர். இதையடுத்து, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டரில், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டரில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்க வேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம் என பதிவிட்டுள்ளார்.