ஐ.எம்.எப் பேச்சு என்னா ஆச்சு: எதிர்க்கட்சி சபையில் கேள்வி

190 0

சர்வதேச நாயண நிதிய பிரதிநிதிகளுடனா கலந்துரையாடல்கள் தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், இது தொடர்பான உண்மை நிலவரத்தை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று (4)  நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்விகளின் போது இடையீட்டு கேள்வியொன்றை முன்வைத்த எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தது. இந்த கலந்துரையாடலின் பெறுபேறுகள் தொடர்பில் நாட்டு மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். அரசாங்கம் இதுதொடர்பாக பாராளுமன்றத்துக்கு அறிவிக்கும் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம்.

ஆனால் இவ்வாறான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்த அவர்,  சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வி என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. குறிப்பாக அமெரிக்க ஊடகங்களே செய்தி வெளியிட்டிருந்தது. அதனால் இதன் உண்மை தன்மை தொடர்பில் நாங்கள் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.

இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை முன்வைப்பது நல்லது என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

இதன்போது பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன, சர்வதேச நாணய நிதிய குழுவினருடன் ஜனாதிபதி, நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் உட்பட அதிகாரிகள் பல சுற்று  பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்தனர். இந்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் தொடர்பாக பிரதமர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பார் என்றார்.