அ.தி.மு.க. பொதுக்குழுவில் இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை

213 0

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சென்னையிலும் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே கொரோனா தொற்றை தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் இன்று முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. அரசியல் நிகழ்ச்சிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதற்காக பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக பொதுக்குழு கூட்டத்துக்கான பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் முன்னாள் அமைச்சர் பென்ஜமின் கூறியதாவது:- கொரோனா பரவத்தொடங்கியபோது கொரோனா என்றால் என்ன? அது எப்படி பரவும்? அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று தெரியாத கால கட்டத்திலேயே அதை கட்டுப்படுத்துவதற்கு அப்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கடுமையாக போராடியது. மிகவும் தெளிவாக செயல்பட்டு கொரோனா தொற்றின் முதல் அலையை கட்டுப்படுத்தியது. எனவே வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே நடத்தப்பட உள்ளது. ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தின் உள்ளே பொதுக்குழு கூட்டம் நடைபெறவில்லை.

அங்கு சமூக இடைவெளியுடன் பொதுக்குழு உறுப்பினர்களை அமர வைக்க முடியாது என்பதால் மண்டபத்துக்கு வெளியே பிரமாண்ட அளவில் பந்தல் அமைத்து பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட உள்ளது. தற்போது பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பந்தலின் உள்ளே சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. பொதுக்குழு உறுப்பினர்கள் 3000-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் சமூக இடைவெளியுடன் அமர வேண்டும் என்பதால் 2500 இருக்கைகள் மட்டுமே அமைக்கப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் அனைவருக்கும் முககவசம், மேலும் அவர்களின் கையில் கிருமிநாசினி தெளிக்கப்படும்.

இதுதவிர அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் தனித்தனியாக ஒரு கிருமி நாசினி பாட்டில் வழங்கப்படும். பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வெளியே ஆம்புலன்சுடன் மருத்துவக்குழுவினர் இருப்பார்கள். அவர்கள் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் வெப்ப பரிசோதனை செய்து உள்ளே அனுப்புவார்கள். பரிசோதனையின்போது காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன உண்டோ அவை அனைத்தும் முழு அளவில் கடைபிடித்து பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.