பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக துப்பாக்கிதாரி பலி – கம்பஹா பெம்முல்லையில் சம்பவம்

203 0

புறக் கோட்டை – பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தின் நுழைவாயில் அருகே, முன்னாள் இராணுவ வீரர் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், துப்பாக்கிதாரியாக செயற்பட்டதாக கூறப்படும் பாதாள உலக சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டம் – யக்கல – பெம்முல்ல பகுதியில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேக நபர் உயிரிழந்ததாகவும் எல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 41 வயதான ; இஹல வித்தானகே ஜோசப் குமார் எனும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

புறக் கோட்டை – பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தின் நுழை வாயில் அருகே, கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணிமனை தெரியும் தூரத்தில், கடந்த மே 30 ஆம் திகதி முற்பகல் ; அடையாளம் தெரியாதோர் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மற்றொரு முன்னாள் இராணுவ வீரர் காயமடைந்தார்.

இந்த துப்பாக்கிச் சூடானது, அளுத்கமவில் ஜூன் 3 ஆம் திகதி கொல்லப்பட்ட நபரின் உறவினர் ஒருவரை இலக்கு வைத்தது எனவும், வழக்கொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த இராணுவ வீரர்கள் ஆள் அடையாளம் மாறியதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டை நடாத்தியவர்கள் புறக்கோட்டையிலிருந்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக சென்று லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து டி.ஆர். விஜேவர்தன மாவத்தை ஊடாக மருதானை நோக்கி சென்று தப்பிச் சென்றுள்ளமையும், அவர்கள் பயனித்த மோட்டார் சைக்கிளின் இலக்கம் போலியானது எனவும் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.சி.டி.யின் திட்டமிட்ட குற்றங்கள் குறித்த விசாரணைப் பிரிவு வெளிப்படுத்திக்கொண்டுள்ளது.

இந் நிலையில் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய, புறக்கோட்டை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் கம்பஹா பகுதியில் மறைந்திருப்பதாக  சி.சி.டி.யின் திட்டமிட்ட குற்றங்கள் குறித்த விசாரணைப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்தே கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய வெள்ளை வேன் ஒன்றில் பொலிஸார் கம்பஹா நோக்கி சென்றுகொண்டிருந்த போது, மெம்முல்லை பகுதியில் வைத்து சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். இதன்போது சந்தேக நபர் தன்னிடம் இருந்த ரீ 56 ரக துப்பாக்கியால் பொலிஸாரை நோக்கி சுட்டுள்ள நிலையில், பதில் தாக்குதலில் சந்தேக நபர் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டினால் பொலிஸார் பயணித்த வேனுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.