மீன் சாப்பிடக்கூடாது என்று வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

284 0

மீன் சாப்பிடக்கூடாது என்று வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை கடலில் கலந்த டீசல் படிமத்தால், ஆழ்கடலில் மீன்களில் எவ்வித நச்சுத்தன்மையும் ஏற்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து பொதுமக்கள் மீன்களை அச்சமின்றி சாப்பிடலாம் என்று மீன்வளத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக சென்னை மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மீன்வளத்துறையை சேர்ந்த அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், மீன் வியாபாரிகள் கலந்துகொண்டு மீன் உணவுகளை சாப்பிட்டனர்.

முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கப்பல்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் கடலில் டீசல் கலந்தது துரதிர்ஷ்டவசமானது. இந்த படிமத்தை அகற்றும் பணி கடந்த மாதம் 30-ந்தேதி முதல் தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் 15 முதல் 20 சதவீதம் வரையிலான பணிகள் மீதம் உள்ளது. அது நாளைக்குள் (இன்று) முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.

இதுவரை 160 டன் படிமம் அகற்றப்பட்டு இருக்கிறது. டீசல் படிமம் அடர்த்தியாக இருப்பதால் அதை அகற்றுவதற்கு உதவியாக புதிய எந்திரம் கொண்டு வரப்படுகிறது.

மீன்களை ஆழ்கடலில் பிடிக்கிறோம். கடலோரம் பிடிக்கப்படுவதில்லை. மீன் உணவு என்பது திடமான ஒரு சத்தான உணவு. அதனை சாப்பிட்டால் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

எனவே நச்சுப்பொருள் கலந்திருப்பதாக கூறி மீன்களை சாப்பிடவேண்டாம் என்று சமூக ஊடகங்களில் வதந்தியை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் மீனவர்கள் மற்றும் மீன்வளத்தை சார்ந்து இருப்பவர்கள் என 1 லட்சத்து 11 ஆயிரத்து 421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்துக்காக ரூ.125 கோடியே 34 லட்சத்து 86 ஆயிரத்து 250 இழப்பீட்டை விபத்துக்கு உள்ளான கப்பல்களின் இன்சூரன்சு கம்பெனிகளிடம் இருந்து பெற்றுத்தரவேண்டும் என்று தமிழக அரசு சார்பில் துறைமுகத்திடம் கோரப்பட்டுள்ளது.

மேலும் கடலில் ஆய்வுகள் நடத்துவதற்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு ஏற்படாமல் மேம்படுத்துவதற்காகவும் ரூ.10 கோடி தருமாறு கேட்கப்பட்டு இருக்கிறது. இந்த தொகை வந்த உடன் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். மேலும் தேவைக்கு தகுந்தாற்போல தமிழக அரசு சார்பில் இடைக்கால நிவாரணம் மற்றும் நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் எஸ்.பெலிக்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

டீசல் படிமத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர்நிலைகள் மற்றும் மீன்களுக்கு பாதிப்பு இருக்கிறதா? என்பது குறித்து நாங்கள் கடந்த 1-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தோம். பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் பாதிக்கப்படாத பகுதிகளில் உள்ள மீன்கள் சமைத்து ஒரு குழுவினருக்கு பரிமாறப்பட்டது.

அதில், மீன்களில் நச்சுப்பொருள் இல்லை என்பது முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மீன்கள் ஆழ்கடல் பகுதிகளில் பிடிக்கப்படுவதால் அதுகுறித்து யாரும் பயப்படவேண்டியது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.