செங்கத்தில் காவலர்களால் தாக்கப்பட்ட குடும்பத்தை சென்னை அழைத்து வந்து சிகிச்சை தரவேண்டும் என நீதிபதி கூறியுள்ளார். ராஜா உள்பட 3 பேருக்கும் ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயர்சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ராஜா தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். போலீசால் 3 பேரும் தாக்கப்பட்டது சமூக வலைத்தளம் மூலம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
விசாரணையை முடித்து எதுவும் நடைபெறவில்லை என்பதுபோல் ஆர்.டி.ஓ. அறிக்கை தந்துவிட முடியாது. மேலும் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்றும், வரும் 17-ம் தேதி ஆர்.டி.ஓ. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் உயிருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறைக்கு கண்டனம்
செங்கத்தில் ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்தை தாக்கிய காவலர்களுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். பொது இடத்தில் காவலர்கள் நடந்து கொண்ட விதத்தை ஏற்க முடியாது என்று நீதிபதி பி.என்.பிரகாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட 3 பேருக்கும் உரிய பாதுகாப்பை போலீஸ் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தொக்காவாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா, அவரது மனைவி உஷா, மகன் சூர்யா ஆகியோர் உறவினர் திருமணத்துக்கு நகை வாங்குவதற்காக செங்கம் பஜார் வீதிக்கு சென்றுள்ளனர். நகை எடுக்க பணம் போதாததால் ராஜாவிற்கும் அவரது மனைவிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த போலீசார் விசாரணை ஏதுமின்றி அவர்களை அடித்து துரத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்களை காவலர்கள் முருகன், விஜயகுமார், நம்மாழ்வார் ஆகியோர் நடுரோட்டில் வைத்து மிருங்கங்களை அடிப்பது போல் அவர்களை அடித்து உதைத்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். தாக்குதலை வேதனையுடன் தட்டிக்கேட்ட பொதுமக்களையும் காவலர்கள் விரட்டி அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.