ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலை குறித்து பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வாவை மேற்கோள்காட்டி ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு வெளியிட்ட தகவல்

227 0

காணாமல்போன குறிப்புப்புத்தகம், வழக்கத்திற்கு மாறான புதிய தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கும் தற்போதைய ஜனாதிபதிக்கும் மிகநெருக்கிய தொடர்பு இருப்பதை புலனாய்வுப்பிரிவின் முன்னாள் அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா கண்டறிந்திருப்பதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா கடந்த 2015 தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையில், கடந்த 2019 நவம்பரில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவானதை அடுத்து நாட்டைவிட்டுத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அதன்பின்னர் நெதர்லாந்தின் ஹேக் நகரில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயத்தில் கடந்த மேமாதம் 13 ஆம் திகதி ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அத்தீர்ப்பாயத்தில் ஆஜரான நிஷாந்த டி சில்வா லசந்தவின் படுகொலை தொடர்பில் தான் கண்டறிந்த விடயங்கள் குறித்து சாட்சியமளித்தார்.

நிஷாந்த டி சில்வா நாட்டைவிட்டு வெளியேறியதன் பின்னர் பொதுக்கட்டமைப்பொன்றின் முன்னிலையில் தோன்றியதும், லசந்தவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் தொடர்பில் பொதுவெளியில் கருத்து வெளியிட்டதும் இதுவே முதற்தடவையாகும்.

சட்டவிரோதப் படுகொலைகள், கடத்தல்கள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறுத்திருப்பினும், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை, கீத்நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், போத்தல ஜயந்த கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் உள்ளடங்கலாக பல முக்கிய வழக்குகளின் விசாரணை அதிகாரியாகப் பணியாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா நாட்டிலிருந்து வெளியேறிய பின்னர் லசந்தவின் படுகொலையுடன் தொடர்புடைய வகையில் அவர் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதாக சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.