வட, கிழக்கு பொருளாதார மேம்பாடுகள் குறித்து நியூயோர்க்கில் கலந்துரையாடல் : புலம்பெயர் பிரதிநிதிகளுடன், சிறீதரன், சாள்ஸ் எம்.பிக்கள் பங்கேற்பு

134 0

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை அடுத்து வடக்கு,கிழக்கு பொருளாதாரத்தினை மேம்படுத்துவது தொடர்பிலான திட்டமிடல்கள் மற்றும் எதிர்கால உபாயங்கள் தொடர்பில் நியூயோர்க்கில் முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் உலகத் தமிழ் அமைப்புக்களின் பேரவையின் அங்கத்தவர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வேலன்சுவாமிகள், மற்றும் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவெல் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை 35ஆவது ஆண்டாக நடாத்தும்  மாபெரும் பேரவைத்தமிழ் விழாவில்” பங்கேற்பதற்காக சிறீதரன், சாள்ஸ் உள்ளிட்டவர்கள் இலங்கையிலிருந்து சென்றுள்ளனர். குறித்த விழா நியூயோர்க்கில் ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், உலகத் தமிழ் அமைப்புக்களின் பேரவையின் பிரதிநிதிகளுடன் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்குள், வட,கிழக்கு பொருளாதார நிலைமைகள் தொடர்பில் இலங்கையிலிருந்து சென்ற பிரதிநிதிகளால் தெளிவுபடுத்தப்பட்டது.

இதனையடுத்து, வட,கிழக்கு பொருளாதார மேம்பாட்டுக்கான எதிர்கால திட்டமிடல்கள் மற்றும் உபாயங்கள் தொடர்பிலும், புலம்பெயர் பிரதிநிதிகள் உள்ளட்டவர்கள் ஆழமான கரிசனையை வெளியிட்டனர்.

அத்துடன், உலகத் தமிழ் அமைப்புக்களின் பேரவையின் பிரதிநிதிகள், சர்வதேச ரீதியில் நடத்தப்பட்டு கண்காணிக்கப்படும் சுதந்திர வாக்கெடுப்பு, வாக்கெடுப்பு நடைபெறும் வரை தீவின் வடக்கு – கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கான இடைக்கால சர்வதேச பாதுகாப்பு பொறிமுறை, அரசியல் வாதங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள் மூலம் உலகளவில் தமிழ் இனப்படுகொலை அங்கீகாரத்தை முன்னெடுத்தல், புலம்பெயர் தமிழர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, சவர்தேச குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச நாடுகளில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றங்களுக்காக இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக செயற்பாடுகளை முன்னெடுத்தல், தமிழர் இறையாண்மை அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சிக்காக குறுகிய மற்றும் நீண்ட காலப்பகுதியில் தமிழர் தேசத்தில் பொருளாதார வளர்ச்சி கட்டமைப்புக்களை உருவாக்குதல் ஆகிய இலக்குகளை நோக்கி செயற்படவுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த விடயங்களை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், நியூயோர்க்கில் இருந்தவாறே வீரகேசரியிடம் தெரிவித்தார். இதேவேளை, சிறீதரன் மற்றும் சாள்ஸ் ஆகியோர் இந்தப் பயணத்தில் அமெரிக்க அரசின் இராஜாங்க திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க வாழ் புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் அமைப்புக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.