நாட்டில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட கொள்கைச்சீராக்கங்களை ஆராயத் தயார் – இலங்கை வர்த்தகப்பேரவையின் தலைவர் விஷ் கோவிந்தசாமி

139 0

நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்தபோதே சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியை நாடுமாறு தாம் வலியுறுத்தியதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை வர்த்தகப்பேரவையின் தலைவர் விஷ் கோவிந்தசாமி பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் ஏனைய கட்டமைப்புக்களுடன் இணைந்து நாட்டில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்கு அவசியமான கொள்கைச்சீராக்கங்களை மேற்கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தகப்பேரவையின் (சேம்பர் ஒஃப் கொமர்ஸ்) 183 ஆவது வருடாந்தப்பொதுக்கூட்டம் கொழும்பில் அமைந்துள்ள சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

அங்கு 2022,2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை வர்த்தகப்பேரவையின் தலைவராக மீளத்தெரிவுசெய்யப்பட்ட விஷ் கோவிந்தசாமி, அதனைத்தொடர்ந்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்தபோதே சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியை நாடுமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்தினோம்.

இருப்பினும் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படாதபோது வெளிநாட்டுக்கையிருப்பு நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு மேலும் சில நன்மதிப்புவாய்ந்த கட்டமைப்புக்கள் மற்றும் பொருளியல் நிபுணர்களுடன் இணைந்து வலியுறுத்தினோம்.

குறிப்பாக தீவிரமடைந்த நெருக்கடிக்கான ஓர் தீர்வாகக் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான யோசனையை அரசாங்கத்திடம் முன்வைத்தோம்.

வெளிநாட்டுக்கையிருப்புப் பற்றாக்குறை மற்றும் அதன் விளைவாக எரிபொருள்  உணவுஇ மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டினால் நாட்டின் பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் பாரிய நெருக்கடி குறித்து எமது வர்த்தப்பேரவை வலுவாகச் சுட்டிக்காட்டிவருவதுடன் இதுகுறித்து அரசாங்கத்துடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்துவருகின்றது.

அதுமாத்திரமன்றி எமது பேரவையின் ஊடாகத் தற்போதைய நெருக்கடியைக் கையாள்வதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருப்பதுடன், அனைத்து சந்தர்ப்பங்களிலும் தீர்வைநோக்கி அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகித்துவருகின்றோம்.

இவ்வாறானதொரு பின்னணியில் கூட்டிணைந்த வர்த்தகப்பேரவை மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்இ பட்டயக்கணக்காளர் நிலையம் உள்ளிட்ட ஏனைய கட்டமைப்புக்களுடன் இணைந்து நாட்டில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்கு அவசியமான கொள்கைச்சீராக்கங்களை மேற்கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்கு எமது வர்த்தகப்பேரவை தயாராக இருக்கின்றது என்று தெரிவித்தார்.