ஒருபோதும் ராஜபக்ஷர்களால் ஆட்சிக்கோ பதவிக்கோ வர முடியாது – திஸ்ஸ விதாரண

252 0

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்க பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்கள் அவதானம் செலுத்தியுள்ளார்கள்.

நாட்டு மக்கள் இனியொரு போதும் ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிக்கமாட்டார்கள் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள எப்பிரச்சினைக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை.

கடந்த காலங்களை காட்டிலும் தற்போது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.எரிபொருள் பற்றாக்குறை முழு நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

அரசியல் ஸ்தீரமற்ற தன்மைக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என்பதை சகல அரசியல் தரப்பினரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

சர்வக்கட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து பொதுத்தேர்தலுக்கு செல்வது சிறந்த தீர்வு காண வேண்டும் என்பதை மகாநாயக்க தேரர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.

சர்வக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதில் ஜனாதிபதி அவதானம் செலுத்தவில்லை.அரசியல் சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பதவி காலத்தை நிறைவு செய்யும் முயற்சியினை மாத்திரம் ஜனாதிபதி முன்னெடுக்கிறார்.

நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி அக்கறை செலுத்தவில்லை.
சர்வக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பதே சகல தரப்பினரது அபிப்ராயமாக உள்ளது.

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் புதிய கூட்டணியை ஸ்தாhபிக்க பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் அவதானம் செலுத்தியுள்ளார்கள் என்றார்.