கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய கைதியின் கொலை : வயர், மூங்கில் பொல்லுகள் மீட்பு : கைதான 4 படையினருக்கும் விளக்கமறியல்

325 0

பொலன்னறுவை வெலிகந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கைதி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், அந் நிலையத்தின் ஆலோசகர்களாக செயற்பட்ட ; நான்கு படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை – ஹாலி எல – தெமோதரை பகுதியை சேர்ந்த 35 வயதான ; குறித்த கைதியின் சந்தேகத்துக்கு இடமான மரணம் தொடர்பில் இரு இராணுவத்தினரையும் இரு விமானப்படையினரையும் வெலிகந்த பொலிஸார் கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

அத்துடன் குறித்த நால்வரின் வாக்கு மூலத்துக்கு அமைய, கைதியை தாக்க பயன்படுத்தியதாக நம்பப்படும் ; வயர் மற்றும் மூங்கில் பொல்லுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலைய ஆலோசகர்களாக கடமையாற்றிய விமானப்படையின் சார்ஜன் தர அதிகாரிகளான ; 35 வயதுடைய கோட்ட பிட்டிய பகுதியைச் சேர்ந்தவரும், ; 36 வயதான நாவலப்பிட்டியைச் சேர்ந்தவரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.

கைதான இராணுவ அதிகாரிகளில் ஒருவர் ஸ்டாப் சார்ஜனான 39 வயதுடைய கல்னேவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்றையவர் சார்ஜன் தர அதிகாரியான 37 வயதுடைய ; ஹுரிகஸ்வெவயைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறினர்.

;சந்தேக நபர்கள், தாக்குதல் மற்றும் கொலை குற்றச்சாட்டின் கீழ் நேற்று (2) பொலன்னறுவை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போது அவர்களை எதிர்வரும்  14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இதனிடையே, குறித்த சம்பவத்தை அடுத்து கடந்த ஜூன் 29 ஆம் திகதி குறித்த புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான கைதிகள் தப்பிச் சென்றிருந்தனர்.

சம்பவம் இடம்பெறும் போது கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்படுகின்ற 998 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டிஆரச்சி தெரிவித்தார்.

அவர்களில் 723 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். அவர்களில் 679 பேர் இன்று ; (2) வரை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ச் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 44 பேரைக் கைது செய்ய பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தற்போது கந்த காடு முகாமில் ; 272 பேர் மட்டுமே புனர் வாழ்வு நடவடிக்கைகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைதி ஒருவரின் சந்தேகத்துக்கு இடமான மரணம் மற்றும் நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் அங்கிருந்து தப்பியோடியமை தொடர்பிலும் பிரத்தியேக சிறப்பு விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஓஷான் ஹேவாவித்தாரனவின் மேற்பார்வையில் வெலிகந்த பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமந்த ரத்நாயக்கவின் கீழ் ; இவ்விசாரணைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.