எதிர்வரும் 6 மாதங்களுக்கு எந்தவொரு உதவிகளும் இலங்கைக்கு கிடைக்கும் என உறுதியாகக் கூற முடியாது – கபிர் ஹசீம்

134 0

சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புக்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.

அவற்றின் அடிப்படையில் அவதானிக்கும் போது எதிர்வரும் 6 மாதங்களுக்கு எந்தவொரு உதவிகளும் கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசீம் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 30 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இந்த அரசாங்கம் சர்வதேசத்தின் மத்தியில் முழுமையாக நம்பிக்கையை இழந்துள்ளது. அதனால் சர்வதேசத்தின் உதவிகள் கிடைக்கப் பெறுமா என்பது கேள்விக்குறியாகும்.

எனவே தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.
நாட்டில் தற்போது அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் அத்தியாவசியமானதாகும். இதற்கு சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.

காரணம் தற்போது யுத்த காலத்தை விட மோசமான நிலைமையே காணப்படுகிறது. நாட்டின் இறையான்மை கூட பாதிக்கப்படக் கூடிய நிலைமையே காணப்படுகிறது.

நாட்டை இந்த நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு எவ்வித பேதமும் இன்றி அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

நாம் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.

அவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது , எதிர்வரும் 6 மாத காலத்திற்கு இலங்கைக்கு எவ்வித சர்வதேச உதவிகளும் கிடைக்கப் போவதில்லை. எனவே எதிர்வரும் 3 வாரங்களில் நிலைமை சீராகும் எனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.