இனப்படுகொலை இடம்பெற்றதை மறுப்பதே இனப்படுகொலையின் இறுதிப் படிமுறையாகும் – விஜய்

312 0

இனப்படுகொலையொன்று இடம்பெற்றது என்பதை மறுப்பதே இனப்படுகொலையின் இறுதிப் படிமுறையாகும். எனவே நாம் தமிழினப்படுகொலை தொடர்பான கதைகளைத் தொடர்ந்து பகிர்ந்துகொள்வோம்.

இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் அறிவூட்டுதல் மற்றும் கலந்துரையாடல் ஆகியவற்றின் மூலம் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதைத் தவிர்க்கவும், எமது சமூகம் இந்த துன்பத்திலிருந்து மீள்வதற்குப் பங்களிப்புச்செய்யவும் முடியும் என்று கனடாவின் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

கனடாவின் ஒன்றாரியோ மாகாணப்பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி இலங்கை – கனேடிய செயற்பாட்டு ஒன்றிணைவு உள்ளிட்ட சில அமைப்புக்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவைக் கடந்த செவ்வாய்கிழமை தள்ளுபடி செய்த ஒன்ராரியோ உயர்நீதிமன்றம், இந்தச்சட்டமூலம் உலகமகாயுத்தம் மற்றும் ஏனைய சர்வதேச மட்டத்திலான போராட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் வகுக்கப்பட்டிருக்கும் மாகாணக்கல்விக்கொள்கையை ஒத்தது என்றும் சுட்டிக்காட்டியிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஒன்றாரியோ உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஒன்றாரியோ மாகாணப்பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்

அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தித் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றாரியோ உயர்நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதுடன், அது அரசியலமைப்பிற்கு அமைவானது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 60 இற்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புக்கள் நீதிமன்றத்தில் தமது சமர்ப்பணங்களை முன்வைத்தன.

குறிப்பாக இவ்வழக்கின் நீதிபதி ‘தமிழினப்படுகொலை தொடர்பிலும், ஏனைய படுகொலைகள் தொடர்பிலும் பொதுமக்களுக்கு அறிவூட்டுவதன் மூலம் எதிர்வருங்காலங்களில் அத்தகைய வன்முறைகளும் அத்துமீறல்களும் இடம்பெறுவதைத் தவிர்த்துக்கொள்ளமுடியும்’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இனப்படுகொலையொன்று இடம்பெற்றது என்பதை மறுப்பதே இனப்படுகொலையின் இறுதிப் படிமுறையாகும் என்று நாம் கடந்தகால வரலாறுகளின் ஊடாக அறிந்துகொண்டிருக்கின்றோம். எனவே நாம் தமிழினப்படுகொலை தொடர்பான கதைகளைத் தொடர்ந்து பகிர்ந்துகொள்வோம்.

தமிழ்மக்களுக்கு நேர்ந்தது என்னவென்பது குறித்து நாம் ஏனையோருக்கு அறிவூட்டுவோம். இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் அறிவூட்டுதல் மற்றும் கலந்துரையாடல் ஆகியவற்றின் மூலம் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதைத் தவிர்க்கவும், எமது சமூகம் இந்த துன்பத்திலிருந்து மீள்வதற்குப் பங்களிப்புச்செய்யவும் முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.