எரிபொருள் இறக்குமதிக்கு அனைவருக்கும் வாய்ப்பு

211 0

ஏகபோகத்தை மாற்றுவதன் மூலம் இயலுமை உள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் எரிபொருள் இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (29) பிற்பகல் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்திப் பணிப்பாளர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, எரிபொருள் நெருக்கடியை தீர்க்க எடுக்கப்பட்டுள்ள அவசர நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் பிரதமர் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

ஐரோப்பாவுக்கு ரஷ்யா எரிபொருள், எரிவாயு வழங்குவதை நிறுத்தியுள்ளதால், தற்போது ஐரோப்பிய நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எரிபொருளை பெறுகின்றன. அதேபோல் சீனா, இந்தியா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் இந்த வரிசையில் உள்ளன. இந்தியாவும் இதே நெருக்கடியில்தான் சிக்கியுள்ளது. எப்படி எரிபொருளை பெற்றுக் கொள்வது என்று. ரஷ்யாவின் எரிபொருளும் பற்றாக்குறையாக உள்ளது. இந்த சூழ்நிலைக்கு மத்தியில்தான் நாம் வந்துள்ளோம். நாம் உடனடியாக எடுக்கவில்லை என்றால் அடுத்த முறை எடுப்பதற்கு தாமதம் ஏற்படும். தற்போது எமது பிரதான நோக்கம் நாட்டு மக்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுப்பது. எரிபொருளை கொண்டு வர முடியுமானால் எந்தவொரு நிறுவனத்திற்கும் நாம் இடமளித்துள்ளோம். நிறுவனங்களின் ஏகபோகத்தை மாற்றி நாம் இடமளித்துள்ளோம்.