திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார் 0

167 0

திருப்பத்தூரில் ரூ.110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இன்று திறப்பு விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வண்ண மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திருப்பத்தூர் மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்றிரவு திருப்பத்தூர் வந்த முதலமைச்சருக்கு, மாவட்ட எல்லையில் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் ஆம்பூர் அருகே உள்ள மொஹிப் ஷூ கம்பெனி விடுதியில் இரவு தங்கி முதலமைச்சர் ஓய்வு எடுத்தார். இன்று காலை ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி, ஜோலார்பேட்டை வழியாக புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் முதலமைச்சருக்கு, அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.

தொடர்ந்து புதிய மாவட்ட அலுவலக வளாகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்கிறார். அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர், பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி உரை நிகழ்த்துகிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.