அனைவருக்கும் எரிபொருள் வழங்கப்படும்! அதிரடியாக அறிவித்தது லங்கா ஐ.ஓ.சி

109 0

எரிபொருள் விநியோகம் தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமையாளர் குப்தா அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அத்தியாவசிய சேவைகளுக்கே எரிபொருள் விநியோகிக்கப்படும் என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த கட்டுப்பாடுகளின் கீழ் நேற்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

அனைவருக்கும் எரிபொருள்

இந்த நிலையில், தாம் அனைவருக்கும் எரிபொருளை தொடர்ந்து விநியோகிப்பதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமையாளர் இன்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் எங்களுக்கு பொருந்தாது. அனைத்து வாகனங்களுக்கும் பற்றுச்சீட்டு முறை மூலம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனையில் குழப்பம்

 

இதேவேளை இன்று பிற்பகல் கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள லங்கா ஐஓசி எரிபொருள் நிலையத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

லங்கா ஐஓசி எரிபொருள் நிலையத்தில் அனைவருக்கும் எரிபொருள் பற்றுச்சீட்டு முறையில் வழங்கப்பட்டு வந்த நிலையில் கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள குறித்த எரிபொருள் நிலையத்திலும் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளது.

எனினும் எரிபொருள் முடிந்து விட்டதாக கூறியதையடுத்து பற்றுச்சீட்டை பெற்றுக்கொண்ட மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

அத்துடன், முச்சக்கரவண்டி சாரதிகள் அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள். அவர்களுக்கு எரிபொருள் கிடைக்கச் செய்வது கட்டாயம்.

நோயாளர் காவு வண்டி இல்லையெனில் நோயாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது முதல் அத்தியவாசியமான தேவைகளுக்கு முச்சக்கரவண்டிகளே பயன்படுகின்றன.

எனவே இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அங்கிருந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.