ஒரு நாட்டை காட்டுச்சட்டத்தால் ஆள முடியாது எனவும், அதற்காக ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஜனநாயக ரீதியான வெற்றிக்காக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயுள்ள பரப்புகளிலும் தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதன் ஊடாக மக்களுக்கான வெற்றிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல தரப்பு பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தலைவர்களுடன் நேற்று (27) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறிப்பாக 21 ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, அதிகாரங்களை கட்டுப்படுத்தும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் ஊடாக ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதே தமது ஒரே நோக்கமாகும் எனவும் எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல தரப்பினரும் எதிர்க்கட்சித் தலைவரிடம் முன்மொழிவுகளை சமர்ப்பித்ததோடு, குறித்த சகல முன்மொழிவுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்தார்.