சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் முக கவசம் அணிவது போன்ற கொரோனா கால கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும்படி சுகாதாரத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முககவசம் அணி வதை அரசு கட்டாயமாக்கி உள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வணிக நிறுவனங்களில் ஏசி வசதியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வருவது பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று முன்தினம் வரை 160 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். கொரோனா கவனிப்பு மையங்களில் 42 பேர் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். குறிப்பாக கோடம்பாக்கம் மண்டலம், ராயபுரம், அண்ணாநகர் மண்டலங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. சென்னை வாசிகள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளார்கள்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- தொற்று பரவல் அதிகரித்தாலும் ஆஸ்பத்திரிகளில் அட்மிட் பண்ண வேண்டிய நிலைைய எட்டியவர்கள் மிக குறைவுதான். எனவே பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. கைவிட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் கடைபிடித்தால்போதும். கொரோனாவை வெல்ல முடியும். தொடர்ந்து மக்களிடம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அவர்கள்தான் கவனமாக செயல்பட வேண்டும். மயிலாப்பூர் லஸ் சந்திப்பில் நாளை (புதன்) காலை 9 மணி முதல் தொடர்ந்து 4 மணி நேரம் நானே நேரில் முக கவசங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளேன். மக்களின் அலட்சியம்தான் கொரோனா பரவலுக்கு இடம் தருகிறது. கொரோனா கால இடர்களை நினைத்து கவனமுடன் செயல்படுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.