காணாமலாக்கபட்டவர்கள் விவகாரத்திற்கு விரைவில் நீதி கிடைக்கும் – யாழில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு

187 0

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் செயற்பாடுகளை துரிதப்படுத்தி , அதன் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் மூலம் தமது உறவுகளை இழந்தவர்களுக்கு உரிய நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என்று நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்த்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டுள்ள நீதி அமைச்சர் விஐயதாச ராஜபக்ஷ , 25 ஆம் திகதி சனிக்கிழமை கல்வியங்காட்டில் அமைந்துள்ள காணாமல் போனார் பற்றிய அலுவலகத்தில் காணமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

யாழப்பாணத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் எவ்வாறு செயற்படுகிறது என்பது தொடர்பில் கண்காணித்தேன்.

காணாமல் போனோர் தொடர்பில் இந்த அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தோடு இழப்பீட்டு அலுவலகமும் இங்கு செய்பட்டு வருகிறது. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தினால் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவர்களால் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் மகிழ்ச்சிக்குரியவையாக உள்ளன. தமது உறவுகளை இழந்த பலரை இங்கு சந்திக்கக் கூடியதாக இருந்தது. இவர்களின் மனக் குறைகள் தொடர்பில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் கரிசனையுடன் செயற்பட்டு வருகிறது. அதற்கமைய தமது உறவுகளை இழந்தவர்களுக்கு உரிய நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்

இதே வேளை யாழில் ஊடக சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர் , ’21 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைபை அங்கீகரித்ததன் பின்னர், புதிய அரசியலமைப்புச் சட்டத்தை அங்கீகரிப்பதற்கு நடவடிக்கை மேற் கொள்வதாகவும், அதனை தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் விதத்தில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனவும், ஜனநாயகத்தை நிறுவுவதற்கு சட்டத்தின் ஆதிக்கத்தைப் பாதுகாத்தல் வேண்டும்.’ எனவும் சுட்டிக் காட்டினார்.

நீதி அமைச்சர் யாழ் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்து வைத்தவாறு சகல இனங்களுக்குமிடையே ஒற்றுமையும், சகோதரத்துவமும் மேம்படுத்தப்பட வேண்டியதுடன், அரச சேவைகள் உள்ளிட்ட சேவைகளில் சம நிலையை ஏற்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தினால் வட மாகாண. யாழ் மாவட்ட பொது மக்களுக்கு சில நலனோம்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அலுவலகத்தின் மூலம் யாழ் மக்களுக்கு மேற் கொள்ளப்படும் சேவைகளை மேலும் மேம்படுத்துவதே இந்த சுற்றுப் பயணத்தின் நோக்கம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந் நாட்டில் நிலவிய போர் சூழலின் பின்னர் இனங்களுக்கிடையே நட்புறவை வளர்த்தல், ஒற்றுமையை ஏற்படுத்தல் மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ளது. போரினால் காணாமல் போன மக்களின் குடும்பங்களுக்கு நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் , அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குதல் மற்றும் போரினால் சேதப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக செயற்பட்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு இழப்பீட்டு அலுவலகமும், காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகமும் தாபிக்கப்பட்டுள்ளது.