அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை – 9 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்

91 0

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியல் சாசன உரிமையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது துக்ககரமான நாள் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 1973-ம் ஆண்டு ரோ வெர்சஸ் வேட் வழக்கில், அமெரிக்க அரசியல் சாசனத்தின் 14-வது திருத்தத்தின்படி கர்ப்பிணிகள் கருக்கலைப்பு செய்வதற்கு உரிமை உள்ளது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, எத்தனை வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்ய அனுமதிப்பது என்பன உட்பட பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

இந்நிலையில், மிசிசிபி மாகாண அரசு 2018-ல் கருக்கலைப்புக்கு தடை விதிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றியது. இதன்படி 15 வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு செய்ய முடியாது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், மாகாண அரசின் சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மிசிசிபி மாகாண அரசின் சட்டம் ரோ வெர்சஸ் வேட் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உள்ளது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில், மிசிசிபி மாகாண அரசின் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில், 6 நீதிபதிகளின் ஆதரவுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.