மிகையான அதிகாரங்களே தற்போதை நெருக்கடிக்குப் பிரதான காரணம் – ஐக்கிய மக்கள் சக்தி

118 0

அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குக் கிடைக்கப்பெற்ற நிறைவேற்றதிகாரங்களே இந்த நெருக்கடி நிலை தோற்றம் பெறுவதற்குப் பிரதான காரணமாகும்.

அவ்வாறிருக்கையில் கோட்டாபய ராஜபக்ஷவின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர்தான் அவரது அதிகாரங்களைக் குறைக்கக்கூடிய அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தம் அமுலுக்குவரும் என்றால், இதனைக் கொண்டுவருவதற்கான காரணம் என்ன? என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

தற்போது அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தம் பற்றிப் பேசப்பட்டுவருகின்றது. நாம் அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தின் ஜனநாயக அம்சங்களையும், அதற்கு அப்பால் ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் குறைப்பதற்கான சரத்துக்களையும் உள்ளடக்கிய திருத்தமொன்றை பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஊடாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தோம்.

ஆனால் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள திருத்தம் ஜனநாயகத்திற்குப் பயனளிக்காத சரத்துக்களையே உள்ளடக்கியிருப்பதுடன் ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பாதுகாக்கும் வகையிலும் அமைந்துள்ளது . அவருடைய அதிகாரங்கள் இத்தவணையில் இல்லாமல் அடுத்த தவணையிலேயே குறைக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டுமக்கள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றனர். அவசியமான மருந்துப்பொருட்களின்றி நோயாளர்கள் பலர் வைத்தியாசாலைகளிலேயே உயிரிழக்கின்றனர்

பொருளாதார நெருக்கடியின் விளைவாக மக்கள் மூன்று வேளையும் போசாக்கான உணவை உட்கொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குக் கிடைக்கப்பெற்ற நிறைவேற்றதிகாரங்களே இந்த நெருக்கடி நிலை தோற்றம் பெறுவதற்குப் பிரதான காரணமாகும்.

அவ்வாறிருக்கையில் கோட்டாபய ராஜபக்ஷவின் பதவிக்காலத்தின் பின்னர்தான் 21 ஆவது திருத்தம் அமுலுக்குவரும் என்றால், இதனை என்ன தேவைக்காகக் கொண்டுவருகின்றார்கள் என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.